வரவு – செலவுத் திட்டத்தில் வடக்கு, கிழக்கு புறக்கணிப்பு; கூட்டமைப்பு

tna2014ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டுள்ளன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த வரவு – செலவுத் திட்டத்தை நாடாளுமன்றில் ஆதரிக்கமாட்டோம் என்றும் கூட்டமைப்பின் வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

இந்த வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்னவென்று கூட்டமைப்பின் வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் நேற்று மாலை வினவியபோது.

இதன்போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:

பொன்.செல்வராஜா

இந்த வரவு – செலவுத் திட்டத்தில் எது விசேடம் என்று சொன்னால் அது பாதுகாப்புச் செலவினங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டதே ஆகும். இதனை நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம். 30 வருட கால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு எதுவித விமோசனமோ – நிவாரணமோ இந்த வரவு – செலவுத் திட்டத்தில் இல்லை. வடக்கு, கிழக்கின் அபிவிருத்தி இந்த அரசால் திட்டமிட்டு முடக்கப்பட்டுள்ளது – என்றார்.

ஈ.சரவணபவன்

யுத்தம் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தில் பாதுகாப்புச் செலவினங்களுக்கே அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது எதற்கு? இந்த வரவு செலவுத் திட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

வடக்கு, கிழக்கில் மீள்குடியேற்றம், வீட்டுத்திட்டம், வாழ்வாதாரங்கள் பற்றி இதில் எதுவுமே விசேடமாக சொல்லப்படவில்லை. இந்த வரவு – செலவுத்திட்டம் தமிழ் மக்களைப் புறக்கணித்து ஏமாற்றியுள்ளது.

தமிழ் மக்களை இந்நாட்டின் பிரஜைகளாக மஹிந்த அரசு இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை இந்த வரவு – செலவுத் திட்டத்திலிருந்து நாம் விளங்கிக்கொள்ளலாம். சர்வதேச சமூகம், இந்த அரசின் செயல்களைப் பார்த்து அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் – என்றார்.

பா.அரியநேத்திரன்

வடக்கு, கிழக்கு மக்களின் அடிப்படை வசதிகளைப் பூர்த்தி செய்யாத இந்த வரவு – செலவுத்திட்டத்தை நாடாளுமன்றில் நாம் ஆதரிக்கமாட்டோம். இந்த வரவு – செலவுத் திட்டத்தில் போரை நடத்திய படையினருக்கு சலுகைகளை வழங்கியுள்ள மஹிந்த அரசு, போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களைத் தூக்கியயறிந்துள்ளது.

வடக்கு, கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட விதவைகள், அங்கவீனர்களுக்குக்கூட எந்தவித விசேட சலுகைகளையும் இந்த அரசு வழங்கவில்லை. வடக்கு மாகாணத்திற்கு 17 பில்லியன் ரூபாவையும், கிழக்கு கிழக்கு மாகாணத்திற்கு 14 பில்லியன் ரூபாவையும் இந்த வரவு – செலவுத் திட்டத்தில் அரசு ஒதுக்கியுள்ளது.

தேர்தலை நோக்கமாகக்கொண்டு தென்பகுதி மக்களை சந்தோசப்படுத்தும் வகையில் இந்த பட்ஜட் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது – என்றார்.

செல்வம் அடைக்கலநாதன்

இந்த வரவு – செலவுத் திட்டத்தில் வடக்கு, கிழக்கு புறக்கணிப்பட்டு இருப்பதால் மஹிந்த அரசின் இனத்துவேசம் – இனவிரோதம் மீண்டுமொருமுறை வெளிக்காட்டப்பட்டுள்ளது. அரசால் அகதியாக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நிவாரணங்கள் எதுவும் இதில் இல்லை.

வடக்கு, கிழக்கை இராணுவ ஆக்கிரமிப்புக்குள் தொடர்ந்து வைத்திருக்கவே இந்த அரசு விரும்புகின்றது. அதற்கேற்ற மாதிரி இந்த அரசு காய்நகர்த்தி வருகின்றது. மஹிந்த அரசின் இனத்துவேச நடவடிக்கைகளுக்கு எதிராக நாடாளுமன்றில் நாம் குரல் கொடுப்போம் – என்றார்.

முற்று முழுதாக கடனை நம்பிய ஒரு வரவு செலவு திட்டம். எம்.ஏ.சுமந்திரன்.

” இது ஒரு கடன் எடுக்கும் வரவு செலவுத்திட்டமாக அமைந்துள்ளது . சாதாரணமாக இந்த வரவு செலவுத்திட்டத்தில் எவ்வித வித்தியாசமும் இல்லை . வாழ்கை செலவு மிகவும் அதிகரித்து போனதற்கு பிறகு ஒரு சொற்ப அளவில் சம்பள அதிகரிப்பை கொடுப்பது சாதாரண மக்களுக்கு எந்த வித விடிவையும் கொடுக்காது . வரவு செலவு திட்டத்தை ஒட்டுமொத்தமாக வர்ணிப்பதாக இருந்தால் இது கடன் என ஒரே சொல்லில் வர்ணிக்கலாம் ”

Related Posts