வடக்கு உள்ளிட்ட 3 மாகாணங்களில் கனமழை வீழ்ச்சியும் காற்றின் வேகமும் அதிகரிக்கும்!!

வடக்கு மாகாணத்தின் சில பிரதேசங்களில் இன்று அதிகாலை 5.30 மணிதொடக்கம் அடுத்த 36 மணி நேரத்தில் 150 மில்லி மீற்றர் பலத்த மழை வீழ்ச்சியும் மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்தவேகத்தில் பலத்தகாற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இவ்வாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பில் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 36 மணித்தியாலங்களில் தாழமுக்கமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் மேற்கு – வடமேற்கு திசையில் இலங்கையின் வடக்கு கரையை அண்மித்ததாக வட தமிழ்நாட்டை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இத் தொகுதியின் தாக்கம் காரணமாக நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போதுமழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறைமாவட்டங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடு முழுவதும் மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலத்தகாற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள் – என்றுள்ளது.

Recommended For You

About the Author: Editor