வடக்கு ஆக்கிரமிப்பு தெற்கில் நடந்தால் ஏற்றுக்கொள்ள முடியுமா? – ராஜிதவின் காரசாரமான கேள்வி

வடக்கில் இராணுவத்தினர் ஆக்கிரமிப்புகளை மேற்கொண்டு வருவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் வடக்கு மக்களின் காணிகளை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் காணி விடுவிப்பு தொடர்பில் வினவிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் ராஜித கூறும் போது, வடக்கில் அப்பாவி பொதுமக்களின் இடங்களை இராணுவம் ஆக்ரமிப்பு செய்துள்ளது. அம்மக்களின் இடங்களில் வீடுகளை அமைத்துக் கொண்டும், உணவகங்களை அமைத்துக் கொண்டும் இராணுவம் கையகப்படுத்தியுள்ளது.

இதனை ஏற்றுக் கொள்ள முடியாது, இதே போன்ற நிலை தெற்கில் ஏற்பட்டால் ஏற்றுக்கொள்ள முடியுமா? வடக்கு மக்களின் காணிகளை விடுவிக்குமாறு நான் அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுத்து வருகின்றேன் என ராஜித தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து தமிழ் அரசியல் கைதிகள் விடயம் தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது,

வழக்குகள் இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். பத்து வருடங்களுக்கும் மேலாக அம்மக்கள் துயரில் வாடுகின்றனர்.

ஏற்கனவே 12 ஆயிரம் விடுதலைப்புலிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டதே ஏன் இப்போது அதனை செய்ய முடியாது. கடந்த அரசாங்கம் முன்னெடுத்த சிறந்த செயற்பாடுகளில் இதுவும் ஒன்று அதனைப் பாராட்டியே ஆகவேண்டும் என ராஜித பதில் அளித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.