வடக்கில் பொருட்களை கொள்வனவு செய்து பொருளாதாரத்தை உயர்த்துங்கள் – ஜெயசேகரம்

விடுமுறை காலத்தில் தமது ஊருக்கு வரும் போது வேறுநாடுகளில் பொருட்களை கொள்வனவு செய்யாது போரினால் பாதிக்கப்பட்டு பொருளாதார ரீதியில் நலிவடைந்துள்ள உங்கள் பகுதியில் கொள்வனவு செய்து வருமானத்தினை உயர்வடைய செய்யுமாறு யாழ். மாவட்ட வர்த்தக சங்கத்தலைவர் ஜெயசேகரம் புலம்பெயர் நாட்டில் உள்ளவர்களுக்கு கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார்.

யாழ். பிராந்திய உள்நாட்டு இறைவரி திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட உயர் வருமான வரி செலுத்துபவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேலும் தெரிவித்தார்.

jayasekaram

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் தேசிய வளர்ச்சிக்காக வடக்கு வர்த்தகர்கள் தங்களால் இயன்ற பங்களிப்பினை வழங்கி வருகின்றனர். 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த நிலை வேறு. ஆனால் யுத்தம் முடிவுக்குப் பின்னர் இருக்கும் நிலை வேறு.

யுத்தம் முடிந்தும் வடக்கில் பொருளாதார நிலை பின்தள்ளியே காணப்படுகின்றது. எங்களது வளங்கள் அனைத்தும் அழிக்கப்பட்ட நிலையில் ஒரு தொழிற்சங்கத்தை கூட இயக்க முடியாத நிலையில் இருந்தோம்.

அதற்குப் பின்னர் வர்த்தகரின் முயற்சியினால் ஓரளவுக்கு முன்னேற்றம் கண்டோம். இருப்பினும் அரசின் கீழ் இயங்கி வந்த தொழிற்சாலைகள் யுத்தம் முடிந்து 5வருடங்கள் ஆகியும் இன்னும் இயக்கம் பெறவில்லை.

இதனால் வடக்கு வர்த்தகர்கள் சொந்த முயற்சிகள் இன்றி தென்னிலங்கையில் உற்பத்தியாகும் பொருட்களையே வேண்டி விற்க வேண்டி ஏற்பட்டுள்ளது.

அத்துடன் தென்பகுதியில் இருந்து விற்பனை நிலையங்கள் பலவும் வடக்கிற்கு வருவதாலும் இங்குள்ள வர்த்தகர்கனின் வியாபாரம் பாதிக்கின்றது.

எனினும் போருக்கு பின்னர் வடக்கின் பொருளாதாரம் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இருப்பினும் புலம்பெயர் வாழ் மக்களால் தங்களுடைய உறவினர்களுக்கு அனுப்பும் பணத்தில் வாழ்க்கை நடாத்தி வந்தனர்.

கடந்த 2 வருடங்களுக்கு மேலாக மிகவும் பொருளாதாரத்தில் பின்னடைவாக இருந்த வடக்கு மாகாணம் கடந்த 2 மாதங்களாக விடுமுறை மற்றும் ஆலய திருவிழாவிற்காக புலம்பெயர் மக்கள் வடக்கிற்கு வந்திருக்கின்றனர்.

இவ்வாறு வருகை தந்தவர்கள் இம்முறை யாழ்ப்பாணம் மற்றும் ஏனைய பகுதிகளில் கொள்வனவு செய்துள்ளனர். புடைவை கடைகள், நகைக்கடைகள், வாகன வசதிகள், விடுதிகள் என்பவற்றிலும் அதிக வருவாய் கிடைக்கப் பெற்றுள்ளது என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் தற்போது யாழ்ப்பாண பொருளாதாரம் ஓரளவிற்கு மூச்சு விட கூடியதாக உள்ளது. எனவே புலம்பெயர் மக்கள் முன்னைய காலங்களைப்போல .இந்தியா , சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் பொருட்களை கொள்வனவு செய்யாது மலிவாக விற்பனை செய்யும் வடக்கில் பொருட்களை கொள்வனவு செய்து உங்கள் தாயாகத்தினை பொருளாதார ரீதியில் வளர்ச்சி அடையச் செய்யுங்கள் என்றும் அவர் மேலும் கோரிக்கை விடுத்தார்.

Recommended For You

About the Author: Editor