வடபகுதிகளில் பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் பெண்ணெருவர் உட்பட நான்குபேரை தாம் நேற்று ஞாயிற்றுகிழமை கைது செய்துள்ளனர் என்று மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட இந்த குழுவிடமிருந்து நகைகள், இலத்திரனியல் உபகரணங்கள், தொலைபேசிகள் உட்பட 24 லட்சம் ரூபா பெறுமதியான பொருள்களையும் தாம் கைப்பற்றினர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இரகசிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து குற்றத்தடுப்பு பொலிஸார் இவர்கள் நான்கு பேரையும் கைது செய்துள்ளனர். இவர்களிடம் முதற்கட்டமாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது 15க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வீடுகளை இரவு வேளைகளில் உடைத்து கொள்ளையிட்டனர் என்ற தகவல் தெரியவந்துள்ளது எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இக் குழுவிடம் இருந்து இருபத்தி நான்கு இலச்சத்து இருபதாயிரத்து எண்ணூறு ரூபா பெறுமதியான நகைகள், மடிக்கணினி, கையடக்க தொலைபேசிகள், டிஜிரல் கமரா ஆகியனவும் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் கூறினர்.
கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் 2013ஆம் ஆண்டுமுதல் 2014ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் பதிநான்கு இலட்சத்தி ஐம்பத்தெட்டாயிரம் ரூபா பெறுமதியான பொருட்களையும், 2015ஆம் ஆண்டு இதுவரையான நாட்களில் ஒன்பது இலச்சத்து அறுபத்தி இரண்டாயிரத்தி எண்ணூறு ரூபா பெறுமதி வாய்ந்த பொருட்களையும் கொள்ளையிட்டுள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளது எனவும் பொலிஸ்தரப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை பொருட்களைப் பறிகொடுத்த வீட்டு உரிமையாளர்களின் தேசிய அடையாள அட்டைகள் மூன்றும் இந்தக் குழுவிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. கைதானவர்களை இன்று மன்னார் மாவட்ட நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மன்னார் தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.