வசந்தபுரம் வீட்டுத்திட்டங்களிற்கான மீதிப்பணம் இன்று வழங்கிவைக்கப்பட்டது

“வசந்தபுரம் வீட்டுத்திட்டங்களுக்கான மீதிப்பணம் வழங்கும் செயற்திட்டம் நேற்றையதினம் (06) காலை இடம்பெற்றது.

இந்த பணம் தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் ஒழுங்கமைப்பில் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளர் அங்கஜன் இராமநாதன் அவர்களின் பிரத்தியேக செயலாளரும் கரவெட்டி பிரதேச சபை உறுப்பினருமான சதாசிவம் இராமநாதன் அவர்களால் வசந்தபுரம் நாவாந்துறை அண்ணா சனசமூக நிலையத்தில் காலை வழங்கிவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் வீடமைப்பு அதிகாரசபையின் யாழ் மாவட்ட முகாமையாளர் மு.ரவீந்திரன் , யாழ் பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் சு.சிவகுமாரன், வீடமைப்பு அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள், கிராமசேவகர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், அரச அதிகாரிகள், பயனாளிகள், சமூக அமைப்புக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

வேலைத்திட்டங்களின் முன்னேற்றங்களை பொறுத்து நிதி தொகை கட்டம் கட்டமாக வழங்கப்படும் என வீடமைப்பு அதிகாரசபையின் முகாமையாளர் ரவீந்திரன் தெரிவித்தார். தொடர்ந்து பயனாளிகளுக்கான நிதித்தொகை வழங்கிவைக்கப்பட்டது.

பொம்மைவெளி பகுதியில் வெள்ளப்பெருக்கு அபாயம் தொடர்ச்சியாக காணப்படுவதாகவும், தமக்கான வீடமைப்பு திட்டத்தை அமைத்து தர நடவடிக்கை எடுக்குமாறும் கோரி அந்த பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருந்தனர்.

இதன்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிறுவனொருவன் ‘மஹிந்த மாமா எங்களுக்கு வீடு கட்டி தரமாட்டிங்களா?”” என்ற பதாகையொன்றை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டது.

இந்த புகைப்படத்தை பார்வையிட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, குறித்த பிரச்சினை தொடர்பில் உடனடியாக ஆராயப்பட்டு கிராமிய வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ இந்திக்க அநுருத்த அவர்களும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான அங்கஜன் இராமநாதனும் இணைந்து அப்பகுதி மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் ஆராய்ந்து தீர்வு எட்ட வழிவகை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.