ரூட் இல்லா பஸ் பயணம் : பாதிக்கப்பட்டவரின் சோகக் கதை

யாழில், இருந்து கொழும்பு சேவையில் ஈடுபடும் பேருந்துகளின் வழித்தட அனுமதி காரணமாக பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

யாழில் இருந்து நேற்று முன்தினம் கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் பேரூந்து வீதி வழித்தட அனுமதிப்பத்திரம் இல்லாத காரணத்தால் நாடு வீதியில் பயணிகள் இறக்கிவிடப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பயணியொருவர் கருத்து தெரிவிக்கையில் :-

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு செல்வதற்காக சாவகச்சேரி நகரில் காத்திருந்த போது தனியார் பேருந்து வந்தது அதில் ஏறி பயணம் செய்த வேளை சங்கத்தானை பகுதியில் வைத்து கொழும்பு செல்வதற்குரிய கட்டணமாக 65௦ ரூபாவினை அறவிட்டனர்.

அதனை தொடர்ந்து கொடிகாமம் பேருந்து நிலையம் வரையில் பயணிகள் ஏறினர் அவர்களிடமும் பணம் அறவிடப்பட்டதை தொடர்ந்து பேருந்து புறப்பட்டு சென்றுகொண்டிருந்த போது மிருசுவில் சந்தியில் கொடிகாமம் போக்குவரத்து பொலிஸார் பேருந்தை வழிமறித்தனர்.

அப்போது நடத்துனர், “பொலிஸார் உங்களிடம் வந்து கேட்டாள் நீங்கள் பேருந்தினை வாடகைக்கு அமர்த்தி சுற்றுலா செல்வதாக கூறுங்கள்” என்று கூறிவிட்டு பேருந்தில் இருந்து இறங்கிவிட்டார்.

நீண்ட நேரமாகியும் பேருந்து புறப்படவில்லை, அப்போது பேருந்தில் எரிய பொலிஸ் உத்தியோகத்தர் நீங்கள் எங்கு போகுறியல் என கேட்க சுற்றுலா செல்கிறோமென கூறினோம். அதனை தொடர்ந்து நீங்கள் யார் தலைமையில் செல்கிறிர்கள் என கேட்டார்? அதற்கு நாங்கள் யாரும் வாய்திறந்து பதில் கூறவில்லை. அப்போது சந்தேகம் கொண்ட பொலிஸார் நீங்கள் கொழும்பிற்கு தானே செல்கிறியல் என கேட்டார்.

அப்போது திடீரென சிங்களத்தில் இரு பயணிகள் பொலிஸாரை பார்த்து கேட்டார்கள். என்ன பிரச்சினை ஏன் பேருந்தை மறித்து வைத்துள்ளீர்கள் என கேட்டனர்.

அதற்கு அந்த பொலிஸார் இந்த பேருந்து பயணிகள் போக்குவரத்து வழித்தட அனுமதியின்றி சேவையில் ஈடுபட்டுகின்றது. ஆகையால் தொடந்து நீங்கள் இந்த பேருந்தில் பயணத்தை மேற்கொள்ள முடியாது. இறங்கி வேறு பேருந்தில் பயணிக்குமாறு கூறினார்.

குறித்த பேருந்தில் கிட்டத்தட்ட 45 மேற்ப்பட்ட பயணிகள் இருந்தோம் எல்லோரும் இறங்கி சாரதியை தேடினால். சாரதி அங்கு இல்லை நடத்துனரிடம் சென்று பணத்தை திரும்பித்தருமாறு கேட்ட போது. பணம் இப்போது இல்லை அந்த பணத்திற்கு எரிபொருள் நிரப்பிவிட்டோம் என தெரிவித்தார்.

இதனால் பணத்தையும் இழந்து பயணத்தையும் தொடரமுடியாமல் வீதியில் சிறுவர்கள் முதல் வயது முதிர்ந்தவர்கள் என எல்லோரும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்தோம்.

அப்போது அந்தவழியாக வந்த தனியார் பேருந்துகளில் இடம் இல்லை. பயணிகள் நிறைந்திருந்தார்கள். மற்றுமொரு பேருந்து நடத்துனருடம் இடமிருக்கா என கேட்ட போது. இந்த பேருந்தில் மட்டுமல்ல கொழும்பு நோக்கி செல்லும் எந்த பேருந்திலும் இடம் இல்லை என கூறினார்.

நின்றுகொண்டு பயணிப்பது என்றால் வாருங்கள் என்றார். வேறு வழியின்றி எங்களில் சிலர் அந்த பேருந்தில் ஏறி மீண்டும் 6௦௦ ரூபா கொடுத்து கொழும்பு வரையில் நின்றவாறு பயணத்தை தொடர ஏனையவர்கள் வேறு பேருந்து வரும் என காத்திருந்தனர்.- என தமக்கு நடந்த சொந்த கதை சோகக்கதையை கூறினார்.