ராமபோஸாவின் வருகை ‘இனப்பிரச்சனை தீர்வுக்காக அல்ல’

தென்னாப்பிரிக்க துணை அதிபர் சிறில் ராமபோஸாவின் இலங்கை விஜயத்தின் நோக்கம் இருநாட்டு உறவுகளை பலப்படுத்துவதே என்று இலங்கையின் துணை வெளியுறவு அமைச்சர் நியோமால் பெரேரா கூறுகின்றார்.

cyril_ramaphosa

இனப்பிரச்சனை தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக அவர் இலங்கை வருவதாக வௌியாகியுள்ள தகவல்களையும் பிரதியமைச்சர் மறுத்துள்ளார்.

அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா தலைமையிலான அரசாங்கக் குழுவினரும் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களும் கடந்த காலங்களில் தென்னாப்பிரிக்கா சென்று பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தனர்.

இந்த சூழ்நிலையில், அதிபர் ஜேகப் சூமாவின் இலங்கை தொடர்பான சிறப்பு பிரதிநிதியாக சிறில் ராமபோஸா இந்த ஆண்டின் முற்பகுதியில் நியமிக்கப்பட்டார்.
இன்று திங்கட்கிழமை இரண்டுநாள் விஜயமாக ராமபோஸா இலங்கை வருகின்றார்.

‘உள்நாட்டுக்குள் தீர்வு காண்பதே இலங்கை அரசாங்கத்தின் நோக்கம்’ என்று கூறிய துணை வெளியுறவு அமைச்சர் நியோமால் பெரேரா, இனப்பிரச்சனை தொடர்பான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ராமபோஸாவின் நோக்கம் இல்லை என்றும் கூறினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேவையானால் வெளிநாடுகளிடம் இனப்பிரச்சனை பேச்சுவார்த்தைகளுக்கு உதவி கோரமுடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஆனால், அரசியலமைப்பில் உள்ள ஏற்பாடுகளைக் கொண்டு தமிழ், சிங்கள மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதே ஜனாதிபதியின் நோக்கம் என்றும் துணை அமைச்சர் கூறினார்.

இலங்கை அரசாங்கக் கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற கடும்போக்கு தேசியவாதக் கட்சிகள் இனப்பிரச்சனை தீர்வில் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் தலையீட்டை எதிர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor