யாழ். போதனா வைத்தியசாலை கழிவுகளை அகற்றும் பணியை தனியாருக்கு கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்தார்.
கடந்த காலங்களில் வைத்தியசாலை கழிவுகளை யாழ். மாநகர சபையே அகற்றி வந்தது. மாநகர சபை, ஒழுங்காக கழிவுகளை அகற்றாதமையால் அந்தப் பணியை தனியாரிடம் வழங்கவுள்ளோம். கடந்த சில நாட்களாக அகற்றப்படாமல் இருந்த கழிவுகள் தற்போது அகற்றப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை புதிய ஒப்பந்தகாரர்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.
சிற்றுண்டிச்சாலையின் தரம் பற்றி முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அங்கு சமைப்பதற்கு இடவசதியும் போதாதுள்ளது. தற்போது வெளியிடத்தில் இருந்தே சமைத்த உணவுகள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய சிறிது காலம் உணவு சமைத்து விற்பனை செய்வது நிறுத்தி வைக்கப்பட்டது. புதிய ஒப்பந்தகாரருக்கு வழங்குவது தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும் என அவர் மேலும் கூறினார்.