ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இரண்டாவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்துக்காக எதிர்வரும் 4 ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அன்றைய தினம் வலி.வடக்கில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதியாகப் பதவியேற்றிருந்தார். பதவியேற்று இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட பலாலி வடக்கு கிராம அலுவலர் பிரிவில் மீள்குடியேற்ற அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வுகளில் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார்.
முப்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மரம் நடுகை நிகழ்விலும் அவர் கலந்துகொள்ளவுள்ளார்.
இதன்போது காங்கேசன்துறை கரையோரப்பகுதிகளை மீன்பிடி நடவடிக்கைக்கு அனுமதிக்கும் அறிவிப்பை ஜனாதிபதி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.