யாழ். மாவட்ட பிரதித் தேர்தல் ஆணையாளராக குகநாதன் நியமனம்

54172774kuhanaathan_200_200யாழ். மாவட்ட பிரதித் தேர்தல் ஆணையாளராக பி.குகநாதன், தேர்தல்கள் திணைக்களத்தினால் நியமிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட தேர்தல் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுவரை காலமும் யாழ். மாவட்ட பிரதித் தேர்தல் ஆணையாளராக கடமையாற்றி வந்த சிவன்சுதன் அச்சுதன், கொழும்பிலுள்ள தேர்தல் திணைக்களத்தின் தலைமையகத்திற்கு மாற்றமாகிச் செல்வதையடுத்து, குகநாதன் யாழ். மாவட்ட தேர்தல் ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

குகநாதன் முன்னரும் யாழ். மாவட்ட பிரதித் தேர்தல் ஆணையாளராக கடமையாற்றியுள்ளார். இருந்தும் அக்காலத்தில் நடைபெற்ற பிரதேச சபைகளின் தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்புமனுக்களை நிராகரித்திருந்ததன் காரணத்தினால் சில காலம் பதவியிலிருந்து நீக்கப்பட்டு பின்னர் பணி நியமனம் வழங்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து, யாழ். மாவட்டத்திற்கு புதிய பிரதித் தேர்தல் ஆணையாளராக சிவன்சுதன் அச்சுதன் நியமிக்கப்பட்ட பின்னர், குகநாதன் கரைத்துறைப்பற்று பிரதேச செயலராக கடமையாற்றி தொடர்ந்து வவுனியா மாவட்ட பிரதித் தேர்தல் ஆணையாளராக கடமையாற்றி வந்தார்.

இந்நிலையில் யாழ். மாவட்ட பிரதித் தேர்தல் ஆணையாளராக கடமையாற்றி வந்த அச்சுதன் கொழும்பிற்கு இடமாற்றலாகிச் செல்வதையடுத்து யாழ். மாவட்ட பிரதித் தேர்தல் ஆணையாளராக தற்போது குகநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் எதிர்வரும் ஜனவரி மாதம் 03ஆம் திகதி தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொள்ளவுள்ளதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.