யாழ். போதனா வைத்தியசாலைக்குள் செல்ல மாநகர சபை உறுப்பினர்களுக்கு விசேட அடையாள அட்டை

யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள் கௌரவமான முறையில் போதனா வைத்தியசாலைக்குள் சென்றுவருவதற்கு வைத்தியசாலை நிர்வாகத்தினர் அடையாள அட்டை ஒன்றினை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறுப்பினர்கள் கூட்டாக இணைந்து பிரதிப் பணிப்பாளர் பவானந்தராசாவிடம் கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளனர்.

யாழ். மாநகர சபையின் விசேட கூட்டம் நேற்று நடைபெற்றது.கூட்டத்தில் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் கலந்து கொண்டிருந்தார். அதன்போதே குறித்த கோரிக்கையினை உறுப்பினர்கள் முன்வைத்தனர்.

மேலும் அவர்கள் தெரிவிக்கையில்,

போதனா வைத்தியசாலையில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடும் பாதுகாப்பு ஊழியர்கள் வைத்தியசாலைக்கு வருபவர்களுடன் மிகவும் அநாகரிகமாக நடந்து கொள்கின்றார்கள்.

அவர்களின் பேச்சுக்களும் தரக்குறைவாகவே காணப்படுகின்றன. இதனால் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்படுகின்றது. எனவே உறுப்பினர்களின் நலனைக் கருத்திற் கொண்டு அடையாள அட்டையினை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மேலும் கோரிக்கை விடுத்தனர்.

அதற்குப் பதிலளித்த பிரதிப் பணிப்பாளர் பவானந்தராசா ,

உங்களுடைய கருத்தை நான் ஏற்றுக்கொள்கின்றேன். உறுப்பினர்களுடைய விபரங்கள் மற்றும் புகைப்படங்களை தருங்கள் அடையாள அட்டையினை வழங்க நடவடிக்கை எடுக்கின்றோம் என்றார்.