யாழ். பல்கலைக்கழகத்தில் மேலும் இரண்டு பீடங்கள்!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மேலும் இரண்டு பீடங்களை உள்வாங்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கான முன்மொழிவுகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற பல்கலைக்கழகப் பேரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.

மருதனார் மடத்தில் அமைந்துள்ள இராமநாதன் நுண்கலைக் கல்லூரியை நுண்கலைப் பீடமாகவும், கைதடியில் அமைந்துள்ள சித்த வைத்தியத் துறையை சித்த வைத்திய பீடமாகவும் தரமுயர்த்துவதற்கான முன்மொழிவுகளே முன்வைக்கப்பட்டன.

யாழ். பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைக் கல்லூரியை நுண்கலைப் பீடமாகத் தரமுயர்த்துவதற்கான சாத்தியப்பாடுகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கென முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை தலைமையில் பேரவையினால் குழு அமைக்கப்பட்டிருந்தது.

அதேபோல், சித்த வைத்தியத் துறையை சித்த வைத்திய பீடமாகத் தரமுயர்த்துவதற்கான சாத்தியப்பாடுகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கென முன்னாள் துணைவேந்தர் சு.மோகனதாஸ் தலைமையில் குழு நியமிக்கப்பட்டிருந்தது.

இந்தக் குழுக்கள், பல்வேறு கள ஆய்வுகள், சந்திப்புகளின் முடிவில் தங்கள் சிபாரிசுகள் மற்றும் திட்ட முன் மொழிவுகளை இன்று இடம்பெற்ற பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பித்தன.

அவற்றை, இம்மாதம் இடம்பெறவுள்ள விசேட மூதவை (செனற்) கூட்டத்தில் முன்வைத்த பின்னர், மூதவையின் சிபாரிசுடன் விசேட பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பித்து, பேரவையின் அங்கீகாரத்துடன் பீடங்களைத் தரமுயர்த்துவதற்கான வேண்டுகையைப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்புவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor