யாழ் நூலகத்திற்கு சுவர்ண புரவர விருது!

உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சும் களனி பல்கலைகழக நூலக மற்றும் தகவல் விஞ்ஞான பிரிவும் இணைந்து நடாத்திய ‘சுவர்ணபுரவர’ எனும் நூலகங்களுக்கிடையிலான தரப்படுத்தலில் யாழ் பொது நூலகம் மாநகர சபைகளுக்கிடையில் முதலாம் இடத்தினை பெற்றுள்ளது.

jaffna-liber

இலங்கையில் அதிசிறந்த நூலகமாக கடந்த வருடம் தரம் உயர்த்தப்பட்ட யாழ் பொது நூலகம் இவ்வருடம் மாநகர சபைகளுக்கிடையில் முதலாம் இடத்தினை பெற்றுள்ளது.

அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற ‘சுவர்ண புரவர விருது’ வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களினால் இநத விருது வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட இந்த விருதினை கௌரவ அமைச்சர் கே.என்.டக்ளஸ்தேவாநந்தா, மற்றும் வடமாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி அவர்கள் திங்கட்கிழமை (27) யாழ் பொதுநூலக நூலகரிடம் சம்பிரதாயபூர்வமாக கையளித்தனர்.

ஆசியாவில் மிகச்சிறந்த நூலகமாக விளங்குகின்ற யாழ் நூலகமானது 1981 ஆம் ஆண்டு எரியூட்டப்படும் முன்னர்வரை அதிசிறந்த நூலகமாக தரம் உயர்த்தப்பட்டு இருந்து வந்தது. 1981 ஆம் ஆண்டு எரிக்கப்பட்டபோதும் அதன்பின்னர் நாட்டில் நிலவிவந்த உள்நாட்டு யுத்தம் காரணமாகவும் நூலகத்தை மீண்டும் சிறப்பாக நடைமுறைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இருந்தபோதும் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சுமூகமான நிலையை அடுத்து யாழ் மாநகர சபையின் துரித முயற்சியினால் இந்நூலகமானது மீண்டும் பழையநிலைக்கு திரும்பியுள்ளது.

இந்நூலகம் கடந்த வருடம் முதல் தேசிய நூலக ஆவணவாக்கல் சபையினால் அதி சிறப்புநூலகமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதோடு 2013 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூலகமாகவும் யாழ் பொது நூலகம் தெரிவுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதொன்றாகும்.