யாழ்.குடாநாடு முழுதும் இராணுவ தேவைக்காக சுவீகரிக்கப்படும் – கஜதீபன்

p-kajatheepanவடக்கில் மேற்கொள்ளப்படும் காணி சுவீகரிப்புக்கு எதிராக மக்கள் அணி திரண்டு போராடாவிட்டால் யாழ்.குடாநாடு முழுவதையும் இராணுவத்தினர் தமது தேவைகளுக்கு என சுவீகரித்து விடுவார்கள் என்று வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் தெரிவித்தார்.

கீரிமலை பிரதேசத்தில் காணி சுவீகரிப்புக்காக நேற்றைய தினம் மேற்கொள்ளப்படவிருந்த நிலஅளவை பணிகளை தடுக்கும் நோக்குடன், காணி உரிமையாளர்களுக்கு ஆதரவாக கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளை சுவீகரிப்பதன் ஊடாக இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும், தமிழ் மக்களை ஆத்திரமூட்டும், வெறுப்பூட்டும் நடவடிக்கைகளைச் செய்து வருகின்றது.

வடக்கிலே கடற்படை முகாம் மற்றும் இராணுவ முகாம் என்பவற்றுக்காக பல ஏக்கர் காணிகளை அரசாங்கம் சுவீகரிக்கின்றது.

இன்றைய (நேற்று திங்கட்கிழமை) தினம் கீரிமலை பிரதேசத்தில், பொது மக்களுக்கு சொந்தமான 183 ஏக்கர் காணியை சுவீகரிக்கும் நோக்குடன் அவற்றை அளவீடு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அக்காணி அளவீட்டு பணிகளை தடுக்கும் நோக்குடன் அக்காணிகளின் உரிமையாளர்களும் நாங்களும் கீரிமலை கடற்படை முகாமுக்கு முன்பாக காத்திருந்த போது நிலஅளவை உத்தியோகஸ்தர்களை இரகசியமான முறையிலே பொலிஸ் பாதுகாப்புடன் காங்கேசன்துறை வீதியில் உள்ள பிறிதொரு பாதையின் ஊடாக முகாமுக்குள் அழைத்து சென்று காணி அளவீட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக எமக்கு தகவல்கள் வந்துள்ளன.

இவ்வாறான காணி சுவீகரிப்புகளுக்கு எதிராக மக்கள் ஒன்றிணைந்து போராடாது விட்டால் கொஞ்சம் கொஞ்சமாக குடாநாடு முழுவதுமே சுவீகரிக்கப்பட்டு விடும். எனவே மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இக்காணி சுவீகரிப்புக்களுக்கு எதிராக போராட முன்வரவேண்டும்’ என அவர் மேலும் தெரிவித்தார்

Recommended For You

About the Author: Editor