யாழ். ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் ‘தறுதலைகள்’

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் ‘தறுதலை’ என்ற வார்த்தையினை வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன், மற்றும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் ஆகியோர் மாறி மாறி பேசிக்கொண்டனர்.

Kajatheepan-Chantherakumar

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் இணைத் தலைமையில் யாழ்.மாவட்டச் செயலகத்தில் நேற்று இடம்பெற்றது.

இதன்போது, மகேஸ்வரி நிதியம் தொடர்பான விவாதம் இடம்பெற்றபோது, முருகேசு சந்திரகுமாரினால் தறுதலை ஆசிரியர்கள் என்ற வசனம் பயன்படுத்தப்பட்டது.

அதன்போது, தறுதலை ஆசிரியர் என்று நீங்கள் யாரைக் கூறுகின்றீர்கள் என கஜதீபன் கேட்க, ‘உம்மைத் தான் தறுதலை ஆசிரியர் என்று கூறினேன்’ என்று சந்திரகுமார் கூறினார்.

அதற்கு பதிலளித்த கஜதீபன் ‘நான் தறுதலை ஆசிரியர் என்றால் நீர் ஒரு தறுதலை அரசியல்வாதி’ எனக் கூறினார். அதற்கு சந்திரகுமார் ‘ஆமாம் நான் தறுதலை அரசியல்வாதி தான்’ எனக் கூறிமுடித்தார்.

வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் ஓர் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை வடமாகாணத்தில் அதிபர்களாக இருக்கவேண்டிய தகுதியுடைய பலர் ஆசிரியராகவும், அதிபர் தகுதியற்ற ஆசிரியர்கள் சிலர் அதிபர்களாகவும் கடமையாற்றுவதாக சந்திரகுமார் தெரிவித்தார்.

அதற்குப் பதிலளித்த வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், கஷ்ரப் பிரதேசத்தில் கடமையாற்றுவதற்கு பின் நிற்பதினால் கஷ்ரப் பிரதேசத்திலுள்ள ஆசிரியர்களை அதிபராக்கியுள்ளதாகவும், மற்றய இடங்களில் அதிபர்களுக்கான வெற்றிடங்கள் இல்லாமையினால் அதிபர் தரத்திலுள்ள சிலர் ஆசிரியர்களாகவும் கடமையாற்றி வருவதாகத் தெரிவித்தார்.

இது தொடர்பாக இன்று தொடர்ந்து நடைபெறவுள்ள கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பிக்கும்படி இணைத்தலைவர்கள் கல்வி அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டனர்.

Related Posts