யாழில் இரு இளைஞர்கள் காணாமல் போன சம்பவம்: 16 இராணுவத்தினர் விளக்கமறியலில்

இரு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்ட நிலையில், காணாமல் போனதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய 16 இராணுவ வீரர்களை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1998ம் ஆண்டு அச்சுவேலிப் பகுதி இராணுவ முகாமில் கடமையாற்றிய குறித்த இராணுவத்தினர் அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த இரு இளைஞர்களை கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் காணாமல் போய்விட்டதாக ஆதாரங்களுடன் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. குறித்த வழக்கு 1999ம் ஆண்டு வரை நடைபெற்று வந்த போதும், பின்னர் வழக்கு விசாரணைகள் இடம்பெறவில்லை.

இந்தநிலையில், குறித்த வழக்கு தொடர்பான அறிக்கைகள் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பின்னர் கடந்த 2015ம் ஆண்டு சுமார் 15 வருடங்களுக்கு பின்னர் இந்த வழக்கினை கொலைக் குற்ற வழக்காக விசாரணை செய்யுமாறு அச்சுவேலி பொலிஸாருக்கும் யாழ். நீதவான் நீதிமன்றத்திற்கும் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

அந்த அறிக்கையின் பிரகாரம், சந்தேகநபர்களான 16 இராணுவத்தினருக்கும் யாழ். நீதவான் நீதிமன்றினால் அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டது.

இதன் பிரகாரம் கடந்த மாதம் 26ம் திகதி ஓய்வு பெற்ற ஐந்து இராணுவத்தினர் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.

அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டதுடன், ஏனைய 11 பேரையும் அடுத்த வழக்கின் போது, நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு அன்றையதினம் அச்சுவேலி பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்தநிலையில் மற்றைய 11 பேரையும் அச்சுவேலி பொலிஸார் நேற்று திங்கட்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.

இதன்போது இவர்களை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor