முள்ளிவாய்க்கால் காணி அளவீடு கைவிடப்பட்டது

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பகுதியில் பொதுமக்களின் எதிர்ப்பால் காணி அளவிடும் நடவடிக்கைகளை கைவிட்டு நிலஅளவையாளர்கள் சென்றுவிட்டதாக வடமாகாணசபை பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் இன்று செவ்வாய்க்கிழமை (23) தெரிவித்தார்.

முல்லைத்தீவு – பரந்தன் (ஏ – 35) வீதியில், வட்டுவாகல் பாலத்தின் பிரதான வீதியில் இருந்து முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம அலுவலர் பிரிவுக்கு உட்பட்ட கடற்கரையோர பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு சொந்தமான 614 ஏக்கர் காணிகள், கடற்படை முகாம் அமைக்கும் நோக்கில் நிலஅளவை செய்யும் பணிகள் இன்று செவ்வாய்க்கிழமை (23) முன்னெடுக்கப்படவிருந்தன.

இது தொடர்பில் நிலஅளவை திணைக்களத்தினர் ஒரு வார காலத்திற்கு முன்னர் காணி உரிமையாளர்களுக்கு அறிவித்தல் விடுத்து, இன்று காலை 9 மணிக்கு நிலஅளவை செய்யும் உபகரணங்களுடன் நிலஅளவையாளர்கள் வருகை தந்திருந்தனர்.

இந்நிலையில், அங்கு ஏற்கனவே குழுமியிருந்த காணிகளின் உரிமையாளர்களான மற்றும் பொதுமக்கள், நிலஅளவை செய்வதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதன்போது, பெரும்பான்னை இனத்தைச் சேர்ந்த இரு உரிமையாளர்கள், தங்களின் காணிகளை அளப்பதற்கு சம்மதம் தெரிவித்திருப்பதாக கூறி நிலஅளவையாளர்கள் அவர்களின் காணிகளை, அந்த இரண்டு காணி உரிமையாளர்களின் முன்னிலையில் அளவீடு செய்தனர்.

இருந்தும், தமிழ் மக்களுக்கு சொந்தமான மிகுதி காணிகள் அளவீடு செய்வதற்கு காணி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து நிலஅளவையாளர்கள் திரும்பிச் சென்றனர்.

அத்துடன், நிலஅளவையாளர்களின் கோரிக்கைக்கு அமைய, காணி அளவீடு செய்வதற்கு சம்மதம் தெரிவிக்காமை தொடர்பில் எதிர்ப்பு கடிதத்தை எழுதி ஒவ்வொரு காணி உரிமையாளர்களும் நிலஅளவையாளர்களிடம் கொடுத்தனர்.

மக்களுடன் இணைந்து இந்த போராட்டத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகரதலிங்கம், வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், ஆகியோரும் கலந்துகொண்டதாக அன்ரனி ஜெகநாதன் மேலும் தெரிவித்தார்.