Ad Widget

முள்ளிவாய்க்காலில் நினைவுச் சின்னம் அமைக்க வடக்கு மாகாண சபையில் பிரேரணை?

northபோரின் ரணங்களால் நிறைந்த முள்ளிவாய்க்காலில் மக்கள் தமது உறவுகளை நினைவு கூருவதற்கு நினைவுச் சின்னம் ஒன்றை வடக்கு மாகாண சபை அமைக்கவேண்டும் எனக் கோரிப் பிரேரணை ஒன்று நாளை மறுதினம் திங்கட்கிழமை இடம்பெறும் மாகாண சபை அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு மாகாணசபையின் ஐந்தாவது அமர்வு நாளை மறுதினம் திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு இடம் பெறவுள்ளது. இந்த அமர்வில் ஆளுங்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 7 உறுப்பினர்களால் பிரேரணை கள் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

பொங்கல் விழா

வடக்கு மாகாண சபையில் கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற அமர்வில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த பொங்கல் விழா மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. அந்தப் பொங்கல் விழா நாளை மறுதினம் அமர்வு இடம்பெறுவதற்கு முன்னதாக நடைபெறவுள்ளது. காலை 8.30 மணிக்கு வடக்கு மாகாணப் பேரவைச் செயலகத்தில் இது இடம்பெறவுள்ளது.

சமர்ப்பிக்கப்படாத நியதிச் சட்டங்கள்

வடக்கு மாகாண சபை பொறுப்பேற்று நான்கு மாதங்கள் கடந்துள்ள நிலையிலும், இன்னும் அமர்வு நடத்தப்படுவதற்குரிய அல்லது வேறு எந்தவொரு நியதிச் சட்டங்களும் சபை அமர்வில் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை.

கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற அமர்வின்போது, 27ஆம் திகதி (நாளை மறுதினம்) இடம்பெறும் அமர்வில் 3 நியதிச் சட்டங்கள் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்திருந்தார். ஆனாலும் நாளை மறுதினம் இடம்பெறவுள்ள அமர்வில் எந்தவொரு நியதிச் சட்டங்களும் சமர்ப்பிப்பதற்கான ஒழுங்குகள் செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று மாலை வரை வடக்கு மகாணப் பேரவைச் செயலகத்துக்கு, சபை உறுப்பினர்களுக்கான நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்டு அனுப்புவதற்கு எந்தவொரு நியதிச் சட்டமும் சமர்ப்பிக்கப்படவில்லை.

பிரேரணைகள்

இந்த அமர்வில் ஆளுங் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 7 உறுப்பினர்களால் 16 பிரேரணைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

பிரேரணைகளும் அவற்றைச் சமர்ப்பிக்கும் உறுப்பினர்களும்

து.ரவிகரன் – மக்கள் தமது உறவுகளை நினைவு கூர முள்ளிவாய்க்காலில் நினைவுச் சின்னம் அமைத்தல்,புதுக்குடியிருப்பு பிரதேச வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக தரம் உயர்த்துதல்.

அன்ரனி ஜெகநாதன் – முல்லைத்தீவு மாவட்டத்தில் காணியற்ற மக்களுக்காக காணிக் கச்சேரி நடத்துதல்

க.சிவாஜிலிங்கம் – தமிழ்த் தேசத்தில் நடந்ததும், நடந்துகொண்டிருப்பதும் இலங்கை நாட்டினால் மேற்கொள்ளப்படுவதும் இன அழிப்புத்தான் என்பதைச் சர்வதேசத்துக்குச் சுட்டிக்காட்டுகின்றோம். இலங்கை அரசின் உள்நாட்டுப் பொறிமுறையில் நம்பிக்கையில்லை. அதனால் உள்நாட்டுப் பொறிமுறையினூடாக விசாரணையை,தீர்வை முற்றாக நிராகரிக்கின்றோம்.

தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், இன அழிப்பு ஆகியவற்றை விசாரணை செய்ய சர்வதேச விசாரணையை ஐ.நா சபையின் துணையுடன் உருவாக்க அனைத்துலக சமூகத்தை வேண்டுகின்றோம்.

திருமதி அனந்தி சசிதரன் – போரில் அரச அதிபர்களின் தரவுகளின் பிரகாரம் காணாமற்போன ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 679 பேர் தொடர்பில் நியாயமான கணக்கெடுப்பை மேற்கொண்டு, இன அழிப்புக்கான ஆதாரத்தை ஜெனிவாவுக்கு நாம் கொண்டு செல்லல். திருக்கேதீஸ்வரத்தில் தோண்டப்படும் மனிதப் புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை.

க.சர்வேஸ்வரன் – போர்க்கால அவசர நிலையைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட பிராந்திய ஆணையாளர் அலுவலகங்களை மூடுதல். அவற்கு ஒதுக்கப்படும் நிதியைப் பயனுள்ள திட்டங்களுக்குப் பயன்படுத்துதல்.

வடக்கு கிழக்கில் வீதிகளின் பெயர்கள், நிறுவனங்களின் பெயர்கள் எழுதப்படும்பொழுது தமிழ் மொழி முதலிலும், சிங்களம் இரண்டாவதாகவும், ஆங்கிலம் மூன்றாவதாகவும் எழுதப்படவேண்டும்.

வலி.வடக்கு மற்றும் முத்தையன் கட்டுகுளத்துக்கு அண்மையில் படையினரால் முன்னெடுக்கப்படும் பண்ணைகளை வடக்கு மாகாண அரசு பொறுப்பு எடுக்க வேண்டும்.கட்டாக்காலி மாடுகளைப் பிடித்து, பண்ணையை உருவாக்க வடக்கு அரசு முனைய வேண்டும்.

ச.சுகிர்தன் – வவுனியா பூந்தோட்டத்திலுள்ள கூட்டுறவுக் கல்லூரி,மன்னார் கூட்டுறவுச் சபை ஆகியவற்றில் உள்ள இராணுவத்தினர் வெளியேற வேண்டும்.

அ.பசுபதிப்பிள்ளை – புழுதியாற்று ஏற்று நீர்ப்பாசனத் திட்டம், ஆனையிறவு உப்புக் கூட்டுத்தாபனத்தை மீள ஆரம்பித்தல், பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீள ஆரம்பித்தல், மாற்றுத் திறனாளிகளின் நிலையத்தைச் சபை கையேற்றல்

போன்ற பிரேரணைகள் நாளை மறுதினம் அவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

Related Posts