முன்னாள் போராளிகளான 36 பட்டதாரிகளுக்கு வேலை

தமிழீழ​ விடுதலைப் புலிகளின் போராட்ட காலத்தில், பல்கலைக்கழக கல்வியைக் கைவிட்டு, இயக்கத்தில் இணைந்துகொண்ட முன்னாள் போராளிகள் 36 பேருக்கு அரச திணைக்களங்களில் ​பட்டதாரிகளாக நியமனம் செய்து கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புனா்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சா் டி.எம். சுவாமிநாதனே, மேற்கண்ட நடவடிக்கையை எடுத்துள்ளார். முன்னாள் போராளிகளான பட்டதாரிகளின் விவரத்தை திரட்டிய அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், அவை தொடர்பிலான அறிக்கையை அமைச்சரவைக்குச் சமர்ப்பித்திருந்தார்.

அந்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு அனுமதி கிடைத்ததையடுத்தே,

கொழும்பில் உள்ள பொதுநிர்வாக முகாமைத்துவ அமைச்சில் அவர்களுக்கு கடந்த வௌ்ளிக்கிழமை (30) நோ்முகப்பரீட்சை நடைபெற்றது.

நேர்முகப்பரீட்சைக்குத் தோற்றிய முன்னாள் போராளிகள், அமைச்சர் சுவாமிநாதனை அவருடைய அமைச்சில் சந்தித்து, தமது நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர்.

அத்துடன், மேலும் 20 பேர் விடுபட்டுள்ளனா். அவா்களுக்கும் நியமனம் பெற்றுத் தரும்படியும் தங்களுக்கான நியமனங்களை தாங்கள் வாழும் அந்தந்தப் பிரதேச செயலாளா் காரியாலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களிலேயே வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள், அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

புனா்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சில் நடைபெற்ற வைபவத்தின் பின்னர், முன்னாள் போராளிகளில் ஒருவரான நாகேந்திரம் மரியபெஸ்டியன் என்ற பட்டதாரி கருத்துரைக்கையில்,

“நாங்கள் பல்கலைக்கழகங்களில் கல்வியைத் தொடராது, 2004, 2006 மற்றும் 2007ஆம் ஆண்டுகளில் இயக்கத்தில் இணைந்திருந்தோம். அதன் பின்னா் 2012ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் புனா்வாழ்வளிக்கப்பட்டு, நமது பட்டப்படிப்பை முடித்தும், கடந்த இரண்டு வருடங்களாகத் தொழிலற்று மிகவும் கஷ்டத்தின் மத்தியில் வாழ்ந்து வருகின்றோம்.

நாங்கள் அனைவரும் திருமணம் முடித்தவா்கள். அத்துடன், 35 வயதுக்கு மேற்பட்டோர். எங்களது நிலையை அறிந்து, எங்களுடைய தொழில்வாய்ப்பு தொடர்பில் அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்து, இந்த நடவடிக்கை எடுத்தமைக்காக அமைச்சா் சுவாமிநாதனுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்” என்றார்.