முதலமைச்சர் வீட்டிற்கு வாடகை மூன்று இலட்சம் போராடியவர் கைகளில் பிச்சைப்பாத்திரம் – ஈ.பி.டி.பி. விந்தன்

இளைஞர்கள் அர்ப்பணிப்புடன் போராடி பெற்றுக்கொடுத்ததே வடமாகண சபை என்றும் போராடிய இளைஞர்களின் குடும்பங்கள் பிச்சைப்பாத்திரத்தை ஏந்தி நிற்க வியர்வை கூட சிந்தாத முதல்வர் விக்கினேஸ்வரன் குடியிருக்கும் ஆடம்பர மாளிகைக்கு மாத வாடகை மூன்று இலட்சம் ரூபா வழங்கப்படுகின்றது என ஈ.பி.டி.பி யின் சர்வதேச முக்கியஸ்தர் எஸ்.விந்தன் தெரிவித்துள்ளார்.

vint1

தெல்லிப்பளைப் பிரதேச இளைஞர்களை இணைத்து கட்டப்பட்ட இளைஞர் அணி அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே எஸ்.விந்தன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில் பாமர மக்கள் பம்பரம் போன்றவர்கள். அவர்களை சுழற்றிவிடும் பொறியாக இருப்பவர்கள் இளைஞர்களே. கடந்த காலங்களைப்போலன்றி மக்களை உணர்ச்சிப் பேச்சுக்களால் உசுப்பேற்றாமல் உணர்வுகளால் மட்டும் அரசியல் இலக்கின் திசை நோக்கி அவர்களை இயக்குவதற்கு இளைஞர்கள் மாபெரும் சக்தியாக திரண்டுவரவேண்டும்.

ஒவ்வொரு இளைஞனுக்கும் ஒவ்வொரு கனவுண்டு. உங்களது வாலிப கனவுகளுக்கப்பால் இலட்சிய கனவுகளுக்காகவும் நீங்கள் உழைக்க முன்வர வேண்டும். சாக்கிரட்டீஸ் சொன்னதுபோல் தீட்டிய வாளும் தினவெடுத்த தோளிலே நீட்டிய ஈட்டியும் இருந்தால் மட்டும் போதாது தீரரே நான் சொல்லும் அறிவாயுதத்தையும் பெற்றுக்கொள்ளுங்கள் என்று தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இளைஞர்களை நோக்கி அழைத்ததை நான் இங்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

வடமாகாண சபை என்பது நாங்கள் போராடிப்பெற்ற உரிமைகளில் ஒன்று இந்த உரிமைப்போராட்டத்தில் அர்ப்பணித்தவர்களது குடும்பங்கள் நடுத்தெருவில் நின்று பிச்சைப்பாத்திரம் ஏந்துகின்றார்கள்.

முதலமைச்சரின் ஆடம்பர மாளிகைக்கு மாதவாடகை மூன்று இலட்சம், அவைத்தலைவர் உட்பட ஐந்து அமைச்சர்களது ஆடம்பர மாளிகைகளுக்கு தலா ஒரு இலட்சம் ரூபா வாடகை வழங்கப்படுகின்றது.

வடமாகாண சபையின் அமர்வுகள் ஒவ்வொன்றிற்கும் மூன்று நட்சத்திர விடுதியிலிருந்து ஆட்டுப்புரியாணியும் கோழிப்புரியாணியும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு அமர்விற்கும் ஐந்து இலட்சம் ரூபா செலவாகின்றது. ஆடம்பர வாகனங்களுக்கு ஐந்தரைக்கோடிக்குமேல் செலவாகியிருக்கிறது.

ஆடம்பர மாளிகை வாழ்வுக்கும் ஆடம்பர வாகனங்களுக்கம் உண்டு கொழுக்கும் மூன்று நட்சத்திர விடுதி உணவிற்கும் செலவாகும் பணத்தில் சிறுதொகையேனும் அற்பணங்களை ஆற்றி நடுத்தெருவில் நிற்கும் குடும்பங்களின் வாழ்வுக்கு செலவழிக்குமா இந்த வடமாகாண சபை?

அரசாங்கத்தின் புனர்வாழ்வு முகாம்களிலிருந்து பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு வடமாகாணசபை எந்தப்பணிகளை இதுவரை ஆற்றியிருக்கிறது?

புலம்பெயர் மக்களின் ஆதரவினூடாக வாக்குப்பிச்சை கேட்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் புலம்பெயர் மக்களின் நிதியுதவியோடு தாயகத்தில் வாழும் உறவுகளின் துயர்களைத் துடைத்திருக்கலாம்.

அப்பாவி மக்களாக இருந்தால் என்ன முன்னாள் புலி உறுப்பினராக இருந்தாலென்ன அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கதவுகளையே தினமும் தட்டிக்கொண்டிருக்கின்றார்கள்.

மாற்றங்களை உருவாக்க இளைஞர்கள் சக்தியாக திரண்டு வரவேண்டும் இவ்வாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.