முக்கொலைச் சந்தேகநபருக்கு அம்மை நோய்

Achchuvely-crimeஅச்சுவேலி கதிரிப்பாயில் மே மாதம் 4ஆம் திகதி இடம்பெற்ற முக்கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் அம்மை நோய்த் தாக்கம் எற்பட்டுள்ளமையினால் நீதிமன்றில் வெள்ளிக்கிழமை (01) ஆஜர்ப்படுத்த முடியவில்லையென சிறைச்சாலை அதிகாரிகள் மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவானிடம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மேற்படி முக்கொலை வழக்கை எதிர்வரும் 22ஆம் திகதிக்கு ஒத்திவைத்த மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஜோய் மகிழ் மகாதேவா, அன்றைய தினம் வழக்குத் தொடர்பிலான குற்றப் பத்திரிகை வாசிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

அத்துடன், அன்றைய தினம் காங்கேசன்துறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகரையும் நீதிமன்றுக்கு சமூகமளிக்கும்படி நீதவான் உத்தரவிட்டார்.

யாழ். அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் மே மாதம் 4ஆம் திகதி அதிகாலை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகன் மற்றும் மகள் மூவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருந்தனர்.

அத்துடன், மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

இந்தக் கொலை தொடர்பில் படுகாயமடைந்த தர்மிகாவின் கணவரான பொ.தனஞ்செயன் ஊரெழு பகுதியில் வைத்து கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு அச்சுவேலிப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

தர்மிகாவின் சகோதரியும் இந்த வாள்வெட்டில் பலியாகியிருந்தவருமான மதுசாவினை இரண்டாவதாகத் திருமணம் செய்ய முடியாத நிலையிலே குறித்த நபர் (தர்மிகாவின் கணவர்) மேற்படி படுகொலையினைச் செய்திருந்தார்.

ஏற்கனவே, கொலையுண்ட மதுசாவின் கணவன் யசோதரன், கொலையாளியான தனஞ்செயனின் மனைவி தர்மிகா ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகி கொலைகளை நேரில் கண்டதாகச் சாட்சியங்களைப் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor