முகப்புத்தகத்தில் அவதூறு – சகோதரன் மீது தாக்குதல்

கிராமமொன்றைப் பற்றி முகப்புத்தகத்தில் அவதூறாக பதிவேற்றம் செய்த ஜேர்மனில் வசிக்கும் இளைஞர் ஒருவரின் யாழ்ப்பாணத்திலுள்ள சகோதரன் மீது தாக்குதல் நடத்திய இருவரை பொலிஸார் கைது செய்த சம்பவமொன்று ஊர்காவற்றுறை கரம்பன் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

நேற்று முன்தினம் இரவு நடத்தப்பட்ட இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநகபர்கள் நேற்று மதியம் கைது செய்யப்பட்டனர் என ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

கரம்பன் கிராமத்தை பற்றி ஜேர்மனில் வசிக்கும் இளைஞர் ஒருவர் தனது முகப்புத்தகப் பக்கத்தில் அவதூறாக பதிவேற்றம் செய்துள்ளார் என்று கரம்பனில் வசிக்கும் அவ்விளைஞனின் சகோதரன் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த 26 வயது சகோதரன் ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற பின் வீடு திரும்பியுள்ளார்.

இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சந்தேகத்தின் பேரில் அதேயிடத்தைச் சேர்ந்த 24 மற்றும் 26 வயதுடைய இரு சந்தேகநபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.