மீரியாபெத்த மக்களோடு துயர்பகிர்வோம் – எஸ்.விஜயகாந்

பதுளை – கொஸ்லந்தை – மீரியாபெத்த தோட்ட கிராமத்தில் இடம்பெற்ற பாரிய மண்சரிவில் உயிரிழந்த எமது மக்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கும் நிகழ்வு நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில், முற்போக்கு தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எஸ்.விஜயகாந் தலைமையில் இடம்பெற்றது.

r2(2)

அதனைத் தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு,

பதுளை – கொஸ்லந்தை – மீரியாபெத்த தோட்ட கிராமத்தில் இடம்பெற்ற பாரிய மண்சரிவில் உயிரிழந்த எமது மக்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கும் இந்த தருணத்தில் அவர்களுடைய வருங்கால வாழ்வு நல்லதோர் ஒளிமயமானதாக அமைய வேண்டும். எனவே தமிழ் பேசும் மக்கள் ஆகிய நாம் அனைவரும் இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்க வேண்டும் என்பதுடன் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வைக் கட்டியெழுப்ப அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும் என்பதுடன், மக்களின் மறுவாழ்விற்கு உதவ முன்வருகின்ற தன்னார்வ அரசசார்பற்ற தனியார் தொண்டு நிறுவனங்களுக்கு முன்னுரிமை அழிக்க வேண்டும்.

மற்றும் ஏனைய அமைப்புகளும் தங்களின் உதவிகளை செய்ய அரசாங்கம் தடைபோடாமல் இருக்க வேண்டும். எனவே இந்த துக்க நினைவில் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் அவர்களின் வேண்டுகோளிற்கு இணங்க நாமும் அவருடன் இணைந்து வடமாகாண தமிழ்பேசும் வர்த்தகர்கள் தங்களுடைய வர்த்தக நிலையங்களில் உணர்வுகளை வெளிக்காட்டும் முகமாக வெள்ளைக்கொடிகளை பறக்கவிடுவதுடன் இந்த துக்க நிகழ்வில் பாடசாலைகள், அரச திணைக்களங்கள், அரசசார்பற்ற நிறுவனங்களின் அலுவலகங்கள் போன்றவற்றிலும் எமது இல்லங்களிலும் கொடிகளை ஏற்றி துக்க நினைவை பகிர்ந்து கொள்வதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து தமிழ் பேசும் மக்களும் நிவாரண உதவிகளை வழங்குவதற்கு முன்வரவேண்டும்.

இந்த அனர்த்தம் நிகழ்வதற்கு அரசாங்கத்தின் அசமந்தப் போக்கே காரணம் என்பது மிகவும் தெளிவாக தெரிகின்றது. எனவே அரசாங்கம் இந்த துக்க தினத்தை தேசிய துக்க தினமாக அறிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.