மீன்பிடி உபகரணங்கள் இன்றி மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள்

யாழ்.வலி கிழக்கு (கோப்பாய்) பிரதேச செயலகத்திற்குட்பட்ட அக்கரைக் கிராம மக்கள் மீன்பிடி உபகரணங்கள் இன்மையால், தங்கள் சொந்தச் செலவில் வலை வாங்கி வீச்சு வலை மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

2013 ஜுலை மாதம் முதல் மேற்படி பகுதியில் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட பின்னர் அப்பகுதியில் 50 குடும்பங்கள் வரையில் மீளக்குடியேறியுள்ளனர்.

மீள்குடியேறிய குடும்பங்கள் ஒவ்வொன்றிற்கும் தலா 8 பைக்கற்று சீமெந்துகள் மற்றும் கூரைகள் என்பன வீடுகள் அமைப்பதற்கு மீள்குடியேற்ற அமைச்சால் வழங்கப்பட்டன.

இடப்பெயர்விற்கு முன்னர், இம்மக்களின் பிரதான தொழிலாக மீன்பிடித் தொழில் இருந்தமையால், மீளக்குடியமர்ந்த பின்னரும் தொடர்ந்து மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கு அவர்களிடம் மீன்பிடி உபகரணங்கள் இருக்கவில்லை.

இந்நிலையில், தங்களிடம் இருந்த நிதியைக் கொண்டு சொந்தமாக வலைகளை வாங்கி, வீச்சு வலை மீன்பிடியில் ஈடுபடுகின்றனர்.

இந்த வீச்சு வலையில் மணலை வகை மீன்கள் பிடிக்கப்படுவதுடன், அந்த மீன்கள் சந்தையில் குறைந்த விலைக்கே விற்பனை செய்ய முடிகின்றதாக மீனவர்கள் கவலை தெரிவித்தனர்.

இது தொடர்பில் வலி.கிழக்குப் பிரதேச செயலாளரிடம் கேட்டபொழுது, மீன்பிடி உபகரணங்கள் வேண்டும் என்று மேற்படி மீனவர்கள் கோரிக்கை விடுத்ததாகவும், உபகரணங்கள் கிடைக்கப்பெற்றதும் அம்மீனவர்களுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor