மீனவர் பிரச்சினை: தமிழக பாஜக குழு சுஷ்மா சுவராஜுடன் சந்திப்பு

தமிழக மீனவர்கள் விவகாரம், கச்சத்தீவு பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் நிரந்தர தீர்வை வலியுறுத்தி, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களை உள்ளடக்கிய குழு நேற்று திங்கள்கிழமை புதுடில்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை நேரில் சந்தித்தது.

fishermenbjpdelhi

மத்திய இணையமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநில தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில், அக்கட்சியின் மூத்த தலைவர்களான இல.கணேசன், எச்.ராஜா, தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த கூட்டத்தில், தமிழக மீனவர்களுக்கு நிரந்தர மீன்பிடி உரிமையை பெற்று தருவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்திய மற்றும் இலங்கை நாட்டு தமிழர்களின் நலன் மற்றும் கச்சத்தீவு உரிமை போன்ற விவகாரங்களில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாடு குறித்து சுஷ்மா ஸ்வராஜுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும், நடைபெற்ற கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

மேலும் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, தமிழக மீனவர்கள் விவகாரம் தொடர்பாக சென்னையில் வரும் ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி மீனவர்களின் பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடப்போவதாகவும் கூறினார்.

அதைத்தொடர்ந்து மீனவ அமைப்புகளின் தலைவர்கள், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

இரண்டு நாட்களுக்கு முன்பாக ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் கச்சத்தீவை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்ததாகவும், அவர்களை தொலைபேசியில் அழைத்து போராட்டத்தை நிறுத்த தாம் கூறியதை ஏற்று அவர்கள் போராட்டத்தை கைவிட்டதாகவும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இதன் தொடர்ச்சியாகவே இன்றைய (நேற்று) கூட்டம் நடைபெற்றதாகவும், தமிழக மீனவர்களின் நலனை காக்கவும், இலங்கை தமிழர்களின் உரிமையை பெற்று தரவும் கட்சியின் தலைமைக்கு தாங்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம் என்றும் அவர் கூறினார்.