“மீனவர்களுடன் மீன்பிடிப் படகுகளும் இந்தியா திரும்பும்”

இலங்கைச் சிறைகளிலிருந்து இந்திய மீனவர்கள் விடுவிக்கப்படும்போது, அவர்களுடைய படகுகளும் விடுவிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழகப் பிரிவு தெரிவித்துள்ளது.

indian_fishermen

இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கைச் சிறைச்சாலைகளில் உள்ள இந்திய மீனவர்களை விடுவிக்குமாறு இலங்கை ஜனாதிபதி ராஜபக்‌ஷ உத்தரவிட்டிருந்ததாக அவரது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதன்கிழமையன்று அறித்திருந்த நிலையில், யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 74 மீனவர்கள் வியாழக்கிழமையன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 40 பேரையும் நம்புதாளைப் பகுதியைச் சேர்ந்த 11 பேரையும் பருத்தித்துறை நீதிமன்றம் விடுவித்தது. புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த 23 பேரை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் விடுவித்துள்ளது.

மன்னார் சிறையிலிருக்கும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 20 மீனவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இந்தியாவை ஆளும் பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழகப் பிரிவு, இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், இலங்கைச் சிறையிலிருந்து விடுவிக்கப்படும் மீனவர்களோடு, அவர்களது படகுகளையும் விடுவிக்க வேண்டுமென மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிடம் வலியுறுத்தியதாக கூறப்பட்டுள்ளது.

ராமேஸ்வரத்தில் உள்ள தமிழக கடலோர விசைப்படகு மீனவர் நலச் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் என்.ஜே. போஸ் என்பவரிடம் சுஷ்மா ஸ்வராஜ் பேசியதாகவும் இலங்கையிலிருந்து விடுவிக்கப்படும் மீனவர்களோடு, அவர்களது படகுகளையும் விடுவிக்க ஏற்பாடு செய்திருப்பதாக அப்போது அவர் கூறியதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மீனவர் சங்கத் தலைவர் போஸை தொடர்புகொண்டு கேட்டபோது, “மத்திய இணையமைச்சரின் தொலைபேசியின் மூலம் வெளியுறவுத் துறை அமைச்சர் பேசினார். மீனவர்களுடன் சேர்ந்து, படகுகளும் விடுவிக்கப்படும் என்று தெரிவித்தார். இந்தியாவில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களையும் விடுக்கவேண்டும் என்று கோரியிருக்கிறேன்” என்று தெரிவித்தார்.

இருந்தபோதும், படகுகள் விடுவிக்கப்படும்வரை தங்களது வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என்று மீனவர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. ராமேஸ்வரம் மீனவர்கள் தவிர, புதுக்கோட்டை, ஜெகதாப் பட்டினம் மீனவர்களும் படகுகளை விடுவிக்கக்கோரி வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடர்ந்துவருகின்றன.