‘மாநகர சபை முதல்வரும் அவரது கணவரும்’ வார்த்தை நீக்கம்

northமாநகர சபையில் ஊழல்கள் இடம்பெறுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி வடமாகாண சபை உறுப்பினர் தாமோதரம்பிள்ளை லிங்கநாதனினால் வடமாகாண சபையில் கொண்டுவரப்பட்ட பிரேரணையில் குறிப்பிடப்பட்ட ‘இந்த மாநகர சபை முதல்வரும் அவரது கணவரும்’ என்ற வார்த்தையினை நீக்குவதாக அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் அறிவித்துள்ளதாக மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா இன்று புதன்கிழமை (23) தெரிவித்தார்.

மாகாண சபையில் மே மாதம் 22ஆம் திகதி இடம்பெற்ற மாதாந்தக் கூட்டத் தொடரில், சபை உறுப்பினர் லிங்கநாதனால், மாநகர சபை எல்லைக்குள் கட்டிட அனுமதி வழங்குவதில் மாநகர சபை ஊழல் செய்கின்றது எனவும், அதற்கு மாகாண சபை நடவடிக்கை எடுக்கக்கோரி பிரேரணையொன்றினை கொண்டு வந்தார்.

அந்தப் பிரேரணை, எதிர்கட்சித் தலைவரின் எதிர்ப்புக்கும் மத்தியில் சபையில் நிறைவேற்றப்பட்டது.
மேற்படி பிரேரணையில் இந்த ஊழலில் மாநகர சபை முதல்வரும் அவரது கணவரும் (முதல்வரின் பிரத்தியேக செயலாளர்) ஈடுபடுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், அந்த வார்த்தையினை நீக்குவதாகக் தெரிவித்து வடமாகாண அவைத்தலைவர் கடந்த 10ஆம் திகதி, வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவரசாவுக்கு அனுப்பியுள்ளதாக முதல்வர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.