மாணவர்கள் கொவிட் தொற்றுக்குள்ளாகும் வீதம் அதிகரிப்பு!!

நாடளாவிய ரீதியில் பெரும்பாலான பாடசாலைகளில் மாணவர்கள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகும் வீதம் அதிகரிகரித்துள்ளது.

இதே நிலைமை தொடருமானால் பாடசாலை கட்டமைப்பு முழுமையாக சரிவடையும். எனவே பாடசாலைக்கு அழைக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட வேண்டும் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்க தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த சில தினங்களாக பாடசாலை மாணவர்கள் மத்தியில் கொவிட் தொற்று பரவும் வீதம் அதிகரித்து வருகிறது. நாட்டிலுள்ள பெரும்பாலான பாடசாலைகளில் வகுப்பறைகள் இடவசதி மட்டுப்படுத்தப்பட்டதாகவே காணப்படுகிறது. பெரும்பாலான வகுப்பறைகளில் ஒரே இடத்தில் 40 மாணவர்கள் வரை காணப்படுகின்றன.

நுவரெலியா போன்ற மாவட்டங்களிலுள்ள பாடசாலைகளில் காற்றூட்ட வசதி மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. அவ்வாறான வகுப்பறைகளில் ஒரு மாணவனுக்கு தொற்றுறுதி செய்யப்பட்டாலும், ஏனையவர்களும் துரிதமாக தொற்றுக்கு உள்ளாகக் கூடும். குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் பாடசாலைகளில் கொவிட் தொற்று பரவல் பாரியளவில் அதிகரித்துள்ளது.

இந்த நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு வகுப்பறைகளுக்கு அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த வேண்டும். அனைத்து மாணவர்களும் பாடசாலைக்கு அழைக்கப்பட்டுள்ளதால் தொற்றாளர் எண்ணிக்கையும் பாரியளவில் அதிகரித்துள்ளது.

இவ்வாறான நிலைமை பாடசாலை கட்டமைப்பு முழுமையாக சரிவடைவதற்கும் , பெற்றோர் மன அழுத்தங்களுக்கு உள்ளாவதற்கும் வழிவகுக்கும்.

இவ்வாறு பெற்றோர் மாத்திரமின்றி மாணவர்களும் மன உளைச்சலுக்கு உள்ளாகுவதைத் தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம்.

இதேபோன்று தொடர்ந்தும் பாடசாலை நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியுமா என்பது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு உரிய தரப்பினரிடம் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.