மாணவர்களின் இணையவழிக் கற்றலுக்கு கட்டணமின்றிய இணைய வசதி – நாமல்

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களும் எந்தவொரு இணைய கட்டணமும் இன்றி இணையவழிக் கற்றலில் ஈடுபட உதவும் இ-தக்ஸலவா திட்டத்தை விரைவுபடுத்துமாறு இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சரும் டிஜிட்டல் தொழில்நுட்ப மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சருமான நமல் ராஜபக்ச சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போதைய இ-தக்ஸலவா அமைப்பில் உள்ள குறைபாடுகளை நீக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி நேற்று அலரிமாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் இதனை தெரிவித்தார்.

ஜூலை 21ஆம் திகதிக்குள் 200 மாணவர்களுக்கு இ-தக்ஸலவா திட்டத்தின் மூலம் இலவசமாக இணைய வகுப்புகளை அணுக அனுமதிக்கும் முதல் கட்டத்தை வெளியிடுமாறு அமைச்சர் நாமல் ராஜபக்ச அறிவுறுத்தியுள்ளார்.

நேற்று நடைபெற்ற கூட்டத்தில், அரசு ஊடக நிலையங்கள் மூலம் ஒரு பிரத்யேக தொலைக்காட்சி சேவையையும் கல்வி நோக்கங்களுக்காக பிரத்தியேகமாக ஒரு வானொலி சேவையையும் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.

இணையவழிக் கற்றல் விடயத்தில் பல்வேறு சிரமங்களைச் சந்திக்கும் மாணவர்களுக்கு ஆதரவளிக்க, பொருத்தமான அலைபேசிப் பயன்பாட்டில் பணிபுரியுமாறு அமைச்சர் சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Recommended For You

About the Author: Editor