மலையக மக்களுக்காக கவலைப்படும் கூட்டமைப்பு தமது சமூகத்திலும் கவனம் செலுத்த வேண்டும் – அமைச்சர் டக்ளஸ்

மலையக மக்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கவலைப்படுவது உண்மையாக இருப்பின் அது வரவேற்கத்தக்கதாகும். அதேபோன்று கூட்டமைப்பு தனது சமூகத்தின் பேரிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேற்று முன்தினம் சபையில் தெரிவித்தார்.

KN-daklas

அரச நிறுவனங்களின் மொழிக் கொள்கை கடைப்பிடிக்கப்படுவதில்லை என்பதால் அரசியலமைப்பின் 16 ஆவது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டுமென்றும் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற வரவுசெலவுத்திட்டம் மீதான முதலாம் நாள் குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் புலம்பெயர் தமிழர்கள் தற்போது தமிழ் மக்களை தனிமைப்படுத்தி வருகின்றனர். அவர்களது செயற்பாடு தமிழ் மக்களை அந்நியப்படுத்திக் கொண்டிருக்கிறது.

அதேபோன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலம்பெயர் தமிழர்களின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே செயற்பட்டு வருகின்றது.

பல்வேறு சந்தர்ப்பங்களிலும் அரசாங்கத்தைக் குறைகூறி வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களை கவர்வதற்காகவே இவ்வாறு செயற்பட்டு வருகிறது.

இத்தகைய செயற்பாடுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் அபிவிருத்திப் பணிகளில் இணைந்து கொள்ள வேண்டும் என்றும் அழைக்கின்றேன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தமிழரசுக்கட்சி மாநாட்டில் பேசிய போது கடந்த காலங்களில் உணர்ச்சி வசப்பட்டும் கற்பனை வாதமாகப் பேசி சந்தர்ப்பங்களைத் தவற விட்டுள்ளோம் என்றும் இனிவரும் காலங்களில் அவ்வாறு இடம்பெறக்கூடாது என்றும் கூறியிருந்தார்.

ஆனாலும் இந்த பாராளுமன்றத்தில் பேசுகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் உணர்ச்சி வசப்படுகின்ற வகையிலும் கற்பனாவாதத்தாலும் பேசிக் கொண்டிருக்கின்றனர் இது தவறான வழிகாட்டலாகும்.

மேலும் மலையக மக்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கவலைப்படுகின்றது. இது உண்மையாக இருந்தால் வரவேற்க வேண்டியதாகும் எனினும் மலையக மக்கள் தொடர்பில் கவலைப்படுகின்ற கூட்டமைப்பு தமது சமூகம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.