மலையக உறவுகளின் துயரத்தில் நாமும் பங்கெடுப்போம் – டக்ளஸ்

பதுளை மாவட்டம், கொஸ்லந்த, மீரியபெத்த பிரதேசத்தில் நடந்த இயற்கை அனர்த்தங்களால் இடர்பட்டு, இழப்புகளை சந்தித்த மலையக மக்களின் துயரத்தில் நாமும் பங்கெடுக்கின்றோம் என ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெவித்துள்ளார்.

dak-thevananthaaa

இது குறித்து உடனடி மீட்பு பணிகளில் ஈடுபடுமாறும், தேவையான நிவாரணங்களை வழங்குமாறும் உத்தரவிட்டிருப்பதோடு, பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்றும் பார்வையிட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நன்றிகளைத் தெரிவிப்பதோடு, ஜனாதிபதியின் பணிப்புரைகளில் எந்தவித காலதாமதத்துக்கும் இடம்கொடுக்காமல் அதிகாரிகள் மனிதாபிமான அடிப்படையில் செயல்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டுமெனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

உறவுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, பெற்றோரை இழந்து அநாதரவாக நிற்கும் பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும் தேவைகள் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகள் அவதானத்துடனும், மனிதாபிமானத்துடனும் செயற்பட்டு அந்தச் சிறுவர்களை அரவணைத்துப் பாதுகாக்க வேண்டுமெனவும் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

‘இதுவரை பத்துப்பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ள அதேவேளை, சரிந்த மண்ணுக்குள் மேலும் சுமார் முந்நூறு பேர் சிக்குண்டிருக்கலாம் என்று அச்சம் தெரிவிக்கப்படுகின்ற செய்தியை கேட்டு ஆறாத துயரமடைந்தேன். மனது மறக்க முடியாத இந்த துயரத்தில் நாமும் பங்கெடுக்கின்றோம்’ என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.