மதுபோதையில் தம்புள்ளையில் பொலிஸார் பெரும் அட்டகாசம்!

சர்ச்சைக்குரிய தம்புள்ளை ஹைரியா பள்ளிவாசலுக்கு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த பொலிஸார் 4 பேர் நேற்று மது அருந்திவிட்டு பெரும் அட்டகாசம் புரிந்ததோடு, அதைத் தடுக்க முற்பட்ட தம்புள்ளை பொலிஸ் தலைமையக அதிகாரியை சுடுவதற்கும் எத்தனித்தனித்ததாக தம்புள்ளை பள்ளிவாசல் நிர்வாக குழு உறுப்பினர் சலீம்தீன் தெரிவித்தார்.

இச்சம்பவம் நேற்று அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. 50இற்கு மேற்பட்ட பொலிஸார் திரண்டுவந்து பொலிஸ் அதிகாரியை அவர்களிடமிருந்து மீட்டதோடு, சம்பந்தப்பட்ட நான்கு பொலிஸாரையும் கைதுசெய்தனர்.

அவர்களுள் ஒருவர் தப்பிச் சென்றுவிட்டார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. நேற்று பிற்பகல் 3 மணிக்கே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காலை 6 மணி முதல் மேற்படி 4 பொலிஸாரும் போதையில் ஆடிப்பாடிக் கூச்சல் போட்டுள்ளனர். பள்ளிக்குத் தொழ வந்தவர்களையும் கேலி செய்து அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தினர்.

இது தொடர்பில் பள்ளிவாசல் நிர்வாகம், தம்புள்ளை பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடு செய்தது. இதன் உண்மையை அறிவதற்காக அந்த இடத்துக்கு வந்த தம்புள்ளை பொலிஸ் தலைமையக அதிகாரிக்கும் அந்த பொலிஸாருக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

இதனால், போதையில் இருந்த பொலிஸார் அந்த பொலிஸ் அதிகாரியை சுடுவதற்கு முற்பட்டுள்ளனர். நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக தம்புள்ளை பொலிஸ் நிலையத்திலிருந்து 50இற்கும் மேற்பட்ட பொலிஸார் வரவழைக்கப்பட்டு போதையில் அட்டகாசம் புரிந்த 4 பொலிஸாரும் கைதுசெய்யப்பட்டனர்.

அவர்களுள் ஒருவர் தப்பிச் சென்றுவிட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பான அனைத்துக் காட்சிகளும் பள்ளிவாசலில் பொருத்தப்பட்டுள்ள கமராவில் பதிவாகின. இந்தக் காட்சிகள் அனைத்தையும் பதிவுசெய்து கொண்ட பொலிஸார், பள்ளிவாசல் கணினியில் இருந்த அந்தக் காட்சிகளை முற்றாக அழித்துவிட்டனர் என்று பள்ளிவாசல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக தம்புள்ளை ஹைரியா பள்ளிவாசல் நிர்வாகக்குழு உறுப்பினர் சலீம்தீன், பொலிஸ்மா அதிபர் இலங்ககோன் மற்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன ஆகியோரிடம் முறைப்பாடுகளைச் செய்துள்ளார்.

இதேவேளை, பள்ளிவாசலில் பாதுகாப்பாக மாறி மாறி நியமிக்கப்படும் பொலிஸார் இரவு நேரங்களில் பள்ளிவாசலுக்குள் காலணிகளுடன் நடமாடுகின்றனர் என்றும் தொழுகை அறைகளில் தூங்குகின்றனர் என்றும் சலீம்தீன் பொலிஸ் நிர்வாகப் பிரிவுக்கு இரண்டு மாதங்களுக்க முன் முறைப்பாடு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தற்போது வேறு பொலிஸார் மூவர் தம்புள்ளை பள்ளிவாசலின் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோகனவிடம் வினவியபோது, தம்புள்ளையில் நடைபெற்ற சம்பவம் தொடர்பில் தனக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்று பதிலளித்தார்.

Recommended For You

About the Author: Editor