மடுவில் இருந்து திருக்கேதீஸ்வரம் வரை பரீட்சார்த்த புகையிரத சேவை

மன்னார் மாவட்டம் மடு புகையிரத தரிப்பிடத்தில் இருந்து தலைமன்னார் புகையிரத தரிப்பிடம் வரைக்குமான பரீட்சார்த்த புகையிரத சேவையினை ஆரம்பித்து வைக்கும் வகையில் மடு புகையிரத தரிப்பிடத்தில் இருந்து மன்னார் திருக்கேதீஸ்வரம் புகையிரத தரிப்பிடம் வரைக்குமான விசேட ரயில் பரீட்சார்த்த சேவை இன்று வெள்ளிக்கிழமை காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

madu_keetheswaram_train

இன்று காலை 10.30 மணியளவில் குறித்த சேவை இடம் பெற்றது.

காலை 10 மணியளவில் மடு புகையிரத தரிப்பிடத்தில் இருந்து பரீட்சார்த்த சேவை ஆரம்பமாகி திருக்கேதீஸ்வரம் புகையிரத தரிப்பிடத்தை வந்தடைந்தது.

மடு புகையிரத தரிப்பிடத்தில் இருந்து தலைமன்னார் புகையிரத தரிப்பிடம் இடையிலான தூரம் 63 கிலோ மீற்றர் ஆகும்.

அதில் மடு தரிப்பிடத்தில் இருந்து திருக்கேதீஸ்வரம் தரிப்பிடம் வரைக்குமான 26 கிலோ மீற்றார் தூரத்திற்கான சேவைகள் இடம் பெற்றது.

குறித்த ஆரம்ப நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய, மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மேல், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சிறி பாஸ்கரன் புகையிரத திணைக்கள அதிகாரிகள், மன்னார் பொலிஸ் நிலைய அதிகாரிகள், திணைக்களத்தின் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.