மக்கள் விழிப்புனர்வோடும் எச்சரிக்கையோடும் விடயங்களை அணுக வேண்டும் இப்படி ஈழமக்கள் ஜனநாயக் கட்சி (ஈ.பி.டி.பி) அறிக்கை ஒன்றின் மூலம் கேட்டுக் கொண்டிருக்கின்றது. அந்த அறிக்கையின் விவரம் வருமாறு
கடந்த சில நாட்களாக வன்னிப்பகுதியில் பதற்றமான ஒரு சூழல் நிலவிக்கொண்டிருக்கிறது. இந்தப் புறச்சூழலை ஏற்படுத்த சில தீய சக்திகள் முயற்சிக்கின்றன. இது விரும்பத்தகாத ஒன்றாகும். நீண்ட போரினால் எமது மக்கள் அகரீதியாகவும் புறரீதியாகவும் பாதிக்கப்பட்டிருந்த நிலை மாறி, கடந்த நான்காண்டுகளாக ஒரு அமைதிச் சூழலில் வாழ்ந்து வருகின்றனர். இந்த அமைதிச் சூழலை மேலும் வலுப்படுத்தி, அகரீதியாக உள்ள அரசியல் நெருக்கடிகளுக்கும் மிகக் குறைந்த அழுத்தத்துடன் உள்ள புறப்பிரச்சினைகளுக்கும் தீர்வைக் காணவேண்டும் என்ற முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, மீண்டும் மக்களை முழுமையான பதற்றத்துக்குள்ளாக்கி, நெருக்கடிகளுக்குள் தள்ளும் முயற்சிகளில் இந்தத் தீய சக்திகள் ஈடுபட்டுள்ளமை கண்டிக்கத்தக்கது. இது மக்களுக்கு மீண்டும் அக – புற நெருக்கடிகளைக் கொடுக்கும் ஒரு நிலையையே தோற்றுவிக்கும். பொறுப்பும் விவேகமுமற்ற இத்தகைய நடவடிக்கைகளினால் எமது மக்களும் எமது கடந்த காலமும் சிதைந்ததை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
தற்போது நிலவிவரும் அமைதிச் சூழலைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டியது நம் ஒவ்வொருவருடைய கடமையுமாகும். அப்படித் தக்க வைத்துக் கொண்டே அகரீதியாக உள்ள அரசியல் நெருக்கடிகளையும் பிரச்சினைகளையும் நாம் தீர்க்க முயற்சிக்க வேண்டும். இதுதான் புத்திசாலித்தனமான ஒரு நடவடிக்கையாகும். இதை நடைமுறைப்படுத்துவதை விட்டு விட்டு, காலாகாலமாக நீடித்து வரும் இனமுரண் உணர்வுகளைக் கிளறி, மக்களை திசைதிருப்பி மீண்டும் ஒரு நெருக்கடிகளுக்குள் தள்ளி விடுவதற்கே பெரும்பாலான தமிழ் அரசியற் சக்திகள் முயற்சிக்கின்றன. இதனை பொறுப்புணர்வுடன் சிந்திப்பவர்கள் அனுமதிக்கக் கூடாது. அப்படி இந்தப் போக்கினை அனுமதித்தால் மீண்டும் பாரிய சேதங்களும் எதிர்விளைவுகளுமே ஏற்படும்.
அப்படி ஒரு நிலை உருவாகினால் மீண்டும் நாம் பலவிதமான நெருக்கடிகளில் சிக்கி, பேரபாயத்தையே சந்திக்க வேண்டிய நிலைமை உருவாகும். எத்தகைய நடைமுறைப் பிரச்சினைகளையும் சட்டரீதியான அணுகுமுறைக்கு ஊடாகவும் பொருத்தமான மனித உரிமைச் சட்டங்களுக்கு ஊடாகவும் தீர்வு காண்பதற்கான முயற்சிகளே இன்று எமக்கு அவசியமாகின்றது. இதைக் குறித்து மக்கள் தெளிவாகவும் பொறுப்புணர்வோடும் சிந்திக்க வேண்டும். ஏனென்றால், எல்லா நெருக்கடிகளையும் அதன் முழுவிசையுடன் நீங்களே முகங்கொடுக்க வேண்டியவர்களாக இருப்பவர்கள். ஆனால், பிரச்சினைகளை உருவாக்குவோர் அந்தப் பிரச்சினைகள் உருவாக்கும் விளைவுகளிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வர். இதுவே கடந்த கால அனுபவம் என்பதை வரலாறு எமக்குத் தெளிவாக உணர்த்தியுள்ளது.
ஆகவே மிகவும் விழிப்புணர்வோடும் எச்சரிக்கையோடும் ஒவ்வொரு விடயங்களையும் அணுகுமாறு கேட்டுக்கொள்கிறோம்.