மக்களது தேவைகள் யாவும் படிப்படியாகப் பூர்த்தி செய்யப்படும் – அமைச்சர் டக்ளஸ்

மக்களுக்கான தேவைப்பாடுகள் மற்றும் குறைபாடுகள் இனங்காணப்படும் போது அவற்றுக்கு பாரபட்சமற்ற விதத்தில் உரியமுறையில் தீர்வுகள் காணப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

vadam04

கல்லூரி வீதி, பருத்தித்துறையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மின்பாவனையாளர் சேவை நிலையத்தை இன்றைய தினம் அமைச்சர் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு திறந்து வைக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களது தலைமையின் கீழான எமது அரசு சகலருக்கும் மின்சாரம் என்கின்ற கோட்பாட்டுக்கு அமைவாக எவ்விதமான பாரபட்சமுமின்றி பல்வேறுபட்ட செயற்திட்டங்களை நாடளாவியரீதியில் முன்னெடுத்து வருகின்றது.

இதனொரு கட்டமாக யாழ்.மாவட்டத்திலும் முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் மின்சாரத்தை எல்லாப் பகுதி மக்களும் பெற்றுக் கொள்ளும் வகையில் பரவலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

முன்னர் வடபகுதி மக்கள் இருட்டில் வாழ்ந்து வந்த நிலையில் தற்போது மின்சேவையானது விரிவாக்கம் செய்யப்பட்டு அனைவரும் வெளிச்சத்தில் வாழக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இம்மின்சேவையை எல்லா மக்களாலும் இலகுவாக பெற்றுக் கொள்ள முடிகிறது.

அந்தவகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களுக்கும் எமது மக்களின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இன்று திறந்து வைக்கப்பட்டுள்ள இச்சேவை நிலையத்தின் ஊடாக வடமராட்சி பகுதியின் மூன்று பிரதேச செயலர் பிரிவுகளிலும் வாழுகின்ற மக்கள் தமக்கான சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும்.

இந்நிலையில், எமது அரசினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அபிவிருத்தி செயற்திட்டங்கள் தொடர்பில் மக்களுக்கு குறைபாடுகள், பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் இருக்கலாம். அவை இனங்காணப்படும் பட்சத்தில் அவற்றை பாரபட்சமற்ற முறையில் தீர்த்து வைப்பதற்கும் நாம் தயாராகவிருக்கின்றோம் என்றும் சுட்டிக்காட்டினார்.