Ad Widget

போரில் உயிர் நீத்த உறவுகளுக்காக அஞ்சலி செலுத்த வேண்டுகிறார் மாவை

mavai mp in“போரில் உயிர் நீத்தோரின் நினைவு நாளில் அஞ்சலியும் ஈமக் கடனும் செலுத்துவோம். அது எமது ஆன்ம உரித்து.” – இப்படிக் கூறியிருக்கின்றார் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் வருமாறு:-

உலகில் எங்கும் நாகரிகம் அடைந்த நாடுகளும், அரசுகளும் மக்களும், போரிலாயினும் பிரளயத்திலாயினும் கடற்கோளிலாயினும் உயிர் நீத்தோருக்குக் கண்ணீர் அஞ்சலி, மலர் அஞ்சலி செலுத்துகின்றனர். நினைவு நாளில் நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு நன்றியுடன் நினைவு கூர்கின்றனர். இந் நிகழ்வுகள் மானுடத்தின் கடனாகின்றது. இது, மனித குலத்தின் உயர் பண்பாடும் உயர் நாகரிகமும் ஆகும். ஆனால் இலங்கையில் தமிழ்த் தேசிய இனத்திற்கு உயிர் நீத்த தம் உறவுகளை நினைத்துக் கண்ணீர் விடக் கூட உரிமை மறுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 2009 மே நடுப்பகுதி வரையில் இனப் போரில் அப்பாவிகளாய்க் கொல்லப்பட்டோருக்காகவும், காணாமல் போனோருக்காகவும், புதைக்கப்பட்டோருக்காகவும், பேரழிவைச் சந்தித்து நிற்போருக்காகவும், அரை குறை உயிரோடு மனநோயளர்களாய் மண்ணில் வீழ்ந்து கிடப்போருக்காவும் பல இலட்சம் நம் மக்கள், நாள்தோறும் கண்ணீர் விட்டும் கலங்கி நிற்கின்றனர். இந்துக்கள் தமது பண்பாட்டில் உறவுகளின் ஆன்ம ஈடேற்றத்திற்கு ஒரு நாளில் விரதமிருந்து, கடலோரங்களுக்கும், ஆற்றோரங்களுக்கும் சென்று நீராடி, நம்பும் தெய்வத்தை வழிபட்டு, ஈமக்கடன் செய்யும் வழக்கமும் பழக்கமும் உடைய பரம்பரையினராய் இருந்து வருகின்றனர். இந்தப் பழக்க வழக்கத்தையும், பண்பாட்டையும் அழிக்க இலங்கை அரசும் இராணுவமும் நடவடிக்கையில் ஈடுபடுவது மக்களின் ஆன்மத்தை அழிக்கும் செயலாகவே இருக்கிறது.

கண்ணீரும் கம்பலையுமாய் நிற்கும் அந்த இலட்சோப இலட்சம் மக்கள் ஒருநாள் ஒன்றுகூடி பிரார்த்தனை செய்யவும் கூட இந்த நாட்டில் இடமில்லையென்றால் இந்த நாட்டில் மக்களாட்சி இருக்கிறதா, நாகரிகமுள்ள நாடாக இது இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

2009 இனப் போரின் இறுதிக் கட்டத்தில் ஆயிரமாயிரமாய் போர்த் தர்மம் மற்றும் விதி முறைகளையும், மனிதாபிமான நியாயங்களையும் மனித உரிமைகளையும் மீறி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். போரில் மாண்டுபோன அனைத்து மக்களுக்காகவும் அவர்களின் ஆத்ம சாந்திக்காகவும் பிரார்த்திக்க அந்த மக்களின் உரிமையை நிலைநாட்ட வேண்டியது அவசியமாகும்.

ஆனால் அரசும், பேரினவாத தீவிரவாத மதவாத சக்திகளும் இராணுவமும் “போரில் வெற்றி பெற்று விட்டோம்” என்றும் “தமிழர் தோற்றுப்போன சமூகம்” என்றும் சுலோகங்களைப் பிரசாரப்படுத்தி வெற்றி விழாக்களை சிங்கள தேசியத்தின் வெறியாக்கிக் கொண்டாடுகின்றன. அந்த வெற்றி விழாக்களினூடாகத் தேர்தலில் வெற்றி பெறும் உத்திகளையும் கையாளுகின்றது அரசு. அந்த விழாக்களுக்கு அரச ஊழியர்களையும், பொது மக்களையும், மாணவர்களையும் அடிமைகள் போல் கொண்டு செல்கின்றனர் இராணுவத்தினர்.

இந்த விழாக்களில் சிங்கள மாணவர்கள் பங்கேற்க வசதியாக அம்பாந்தோட்டைப் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுகின்றது. மறுபக்கத்தில் போரில் தமது உறவுகளைப் பலி கொடுத்த மக்களும் அந்த இழப்புக்களால் மனசாட்சியுள்ள, மனதாபிமானமுள்ள மனிதர்களும், அனுதாபம் கொண்டோரும் அந்த உறவுகளின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கவும், விளக்கேற்றி வழிபடுவதற்கும் ஆன்ம ஈடேற்றத்துக்காக ஈமக்கடன் செய்து ஒன்று கூடி கண்ணீர் சிந்திக் கதறி அழவும் அதனால் ஆறுதல் பெறவும் இடமளிக்காமல் இந்த அரசு தடைவிதிக்கிறது.

இத்தகைய அடக்குமுறை எதிர்காலத்தில் மேலும் இனமுரண்பாடுகளையும், இனங்கள் பிளவுபடுவதையும் ஆழமாக்கிவிடும், பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்திவிடும் என எச்சரிக்கின்றோம். இவற்றின் பின் விளைவுகள் இந்நாட்டில் எந்த வகையிலும் இன, மத, மனிதகுல நல்லிணக்கத்தை ஏற்படுத்தி விடா. இத்தகைய அடக்குமுறைகளுக்கு எதிராக ஜனநாயக சக்திகளும், மனித நேயம் மிக்கவர்களும் மனித உரிமையாளர்களும் ஒன்றாக எழுந்து நிற்கவேண்டும், குரலெழுப்ப வேண்டும், போராடவேண்டுமென அழைப்புவிடுக்கின்றோம்.

இத் தடைகளை விதிப்பதற்கு அரசும் இராணுவமும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பாவிப்பது மிகக் கொடுமையானதாகும். இதனைத் தீவிரமாக எதிர்க்க வேண்டுமெனவும் கோருகின்றோம். இத் தடைச் சட்டத்தை பயன்படுத்துவதற்கோ, பல்கலைக்கழகங்களை மூடுவதற்கு உத்தரவு விதிப்பதற்கோ, வீடு வீடாக சோதனையிடுவதற்கோ இராணுவத்திற்கு அதிகாரமளித்தவர் யார்? அவர்களுக்கு இந்த அதிகாரமுண்டா? இத்தனையும் இவ்வாறு நடக்குமானால் இந்த நாட்டில் மக்கள் ஆட்சி, ஜனநாயக அரசு ஒன்று இருக்கிறதா என்ற கேள்வி எழுகின்றது.

எனவே மே 18 இல் மட்டுமல்ல பாதிக்கப்பட்ட மக்கள் உறவுகளை இழந்த மக்கள் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் உறவுகளுக்காகக் கண்ணீர் சிந்துவதற்கோ, கதறி அழுவதற்கோ ஒன்று கூடிப் பிரார்த்திப்பதற்கோ, விளக்கேற்றி வழிபாடு செய்வதற்கோ, அதனால் ஆத்மம் ஆறுதல் பெறுவதற்கோ உள்ள உரிமையை நிலை நாட்டுவோம்.

அன்பான உறவுகளே! மே-18 மாலைப் பொழுது 6.30க்கு எம் உறவுகளின் ஆத்ம ஈடேற்றத்துக்காக தெய்வ சந்நிதிகளில் – வீடுகளில் – ஒன்று கூடும் இடங்களில் – உலகில் நாம் எங்கிருந்தாலும் சூரியன் மறைந்த பொழுது ஒரு கணம் மின் ஒளியை நிறுத்தி விட்டு எழுந்து நின்று ஒரு நிமிடம் பிரார்த்திப்போம்! அஞ்சலி செய்வோம்! ஒளிவிளக்கை ஏற்றுவோம்! மெழுகுவர்த்தியை ஏந்துவோம்! இந்த உரிமையை, கடமையை நிறைவேற்றுவோம் என அழைக்கின்றோம்.

என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

மே 18ஐ நினைவு நினைவுகூர்ந்தால் கைது

வடமாகாண சபையில் நினைவேந்தல்! அனைவரையும் அணி திரளுமாறும் அழைப்பு

Related Posts