பொருளியலாளர் வரதராஜன் காலமானார்

varatharபிரபல பொருளியல் ஆசிரியரான சின்னத்துரை வரதராஜன் இன்று தனது 63 வது வயதில் காலமானார்.புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று(18-08-2014) காலமானார்.

இவர் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி சார்பாக அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸில் கடந்த 2010 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் முதன்மை வேட்பாளராகப் போட்டியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.சென்ற வருடம் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியில் இருந்து விலகிக்கொண்டார்.

தென்னிலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரங்களின் பாதிப்பைத் தொடர்ந்து தாய் மண்ணில் சுயமாக தொழில் புரிய வேண்டும் என்ற கொள்கைக்காகப் பேராதனைப் பல்கலைக்கழக பொருளியல் துறை விரிவுரையாளர் எனும் பதவியினை துச்சமென தூக்கி எறிந்து தனியார் கல்விநிலையம் ஊடாக பல்லாயிரம் மாணவர்களின் பொருளியல் கல்விக்கு தன்னை அர்ப்பணித்திருந்தார்.தமிழ் உயர்தர மாணவர்களின் பொருளியல் துறையின் தூண்களில் ஒருவராக இவர் திகழ்ந்திருந்தார்.

1987-88-89 ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தில் தனியார் கல்வி நிலையங்களில் பொருளியல் கற்பித்த ஆசான்களில் முக்கியமானவராக திகழ்ந்திருந்தார். சிறந்த கற்பிக்கும் ஆற்றல் மிக்கவர் என மாணவர்களால் போற்றப்பட்டவர்.விடுதலைப்புலிகளின் காலத்தில் பொருண்மிய ஆலோசகராகவும் இவர் திகழ்ந்திருந்தார்.

1989இல் இந்திய இராணுவ ஆக்கிரமிப்பின் உச்சக்கட்டத்தில் ஆசிரியர் கிருஸ்ணானந்தன் சுட்டுக் கொல்லப்பட்டபோது அவருடைய இறுதிச் சடங்குகளை துணிவுடன் நின்று நடத்தியவர் வரதராஜன்.1989இல் இந்திய இராணுவத்தால் கைது செய்யப்பட்டார். 2008இல் கொழும்பில் வைத்து கடத்தப்பட்டார்.

வடக்கு கிழக்கு மாகாணத்தின் வரலாறுகளையும் அதன் பொருளாதார வளங்கள் பற்றிய விபரங்களையும் தெளிவாக அறிந்து வைத்திருந்த ஓர் புலமையாளனாக இவர் கருதப்படுகின்றார்

அவர் இறுதிக்காலத்தில் யாழ் எய்ட் ஆலோசகராகவும்,கலிங்கம் இதழின் செயற்குழு உறுப்பினராகவும் கடமையாற்றியிருந்தார்.

மூன்று தசாபதங்களாக பொருளியல் துறையில் யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல கொழும்பு வன்னி என்று எல்லா இடங்களிலும் தனது முத்திரையினை பதித்த பொருளியல் நிபுணரை கல்விச்சமூகம் இழந்திருக்கின்றது என சமூகவலைத்தளங்களில் அவருடைய மாணவர்கள் தெரிவித்திரு்க்கின்றனர்