ஒரு பொருத்து வீட்டுக்கு, பலர் இரு தடவைகள் விண்ணப்பித்துள்ளனரென, அரச அதிகாரியொருவர் தெரிவித்தார்.
“கடந்த காலங்களில், வீட்டுத் திட்டங்களுக்குப் பயனாளிகள் தெரிவுசெய்யப்படும் போது, புள்ளிகள் வழங்கப்பட்டே தெரிவுகள் இடம்பெற்றன. பொருத்து வீட்டு விண்ணப்பத்தில் புள்ளிகள் வழங்கப்படும் முறை இல்லை.
மீள்குடியேற்ற அமைச்சால் வழங்கப்படவுள்ள பொருத்து வீடுகளுக்கான விண்ணப்பம் கோரப்பட்ட போது, விண்ணப்பித்தவர்களுக்கு சொந்தமாகக் காணி உள்ளதா? என்பது தொடர்பில் கேட்கப்படவில்லை. சொந்த காணிகள் இல்லாதோரும் விண்ணப்பித்துள்ளனர்.
விண்ணப்பித்தவர்களில் பலர், நேரடியாக மீள்குடியேற்ற அமைச்சுக்கும் கிராம சேவையாளர்கள் ஊடாகவும் விண்ணப்பித்துள்ளனர். அதனால் பலர், இரு தடவைகள் விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில், எவ்வாறு பயனாளிகளைத் தெரிவு செய்யப் போகின்றார்கள் என்பது தொடர்பில் எவ்விதத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை” என, அவ்வதிகாரி மேலும் கூறினார்.