புலிகளும் இல்லை; ஆட்லறியும் இல்லை! இனியும் ஏன் நில அபகரிப்பு வேலை? சபையில் சம்பந்தன் எம்.பி. கேள்வி

sampanthanபுலிகளின் காலத்தில் அவர்களின் ஆட்லறித் தாக்குதல்களைக் காரணம் காட்டி உயர் பாதுகாப்பு வலயங்களை விஸ்தரித்தீர்கள். இப்போது புலிகளும் இல்லை, ஆட்லறித் தாக்குதல் அச்சுறுத்தலும் இல்லை. பிறகு ஏன் நில அபகரிப்பைத் தொடருகின்றீர்கள்? – இவ்வாறு நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட எம்.பியுமான இரா.சம்பந்தன்.

காணிகளை இழந்த மக்களுக்கு ஆட்சியுரிமைச் சட்டமூலம் சாதகமாக அமைந்தாலும் அதன் கால எல்லை ஒரு வருடமாக்கப்பட்டதன் பின்னணி என்னவென்றும் நாடாளுமன்றில் கேள்வி எழுப்பிய அவர், மக்களுக்கு நீதியை வழங்காத அரசால் நிலைத்து நிற்கமுடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்சியுரிமை (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே சம்பந்தன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:-

“காணி விவகாரம் தொடர்பில் சில மாற்றங்களை மேற்கொள்வதற்காக இச்சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதில் சாதகத்தன்மை பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், நன்மைபெறக்கூடிய கால எல்லை ஏன் ஒருவருடமாக்கப்பட்டது? இதன் பின்னணி என்ன? காணி சம்பந்தமாக நீதிமன்றில் வழக்கு தொடுக்கப்பட்டால் சிலவேளை 10 வருடங்களாகக் கூட வழக்கு விசாரணை நடைபெறும். இந்நிலையில், மேற்படி சட்டவரைவில் ஒரு வருடமென மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை ஏன்? மேற்படி சட்ட வரைவு திருத்தத்தின் 5ஆம் பகுதி குறித்து நிற்பது என்ன? புரியவில்லை.

அது பற்றிய விளக்கம் அவசியம். வடக்கு, கிழக்குப் பகுதிகளில் காணிப் பிரச்சினை அதிகரித்துக் காணப்படுகின்றது. இன்னும் உயர் பாதுகாப்பு வலயங்கள் விடுவிக்கப்படவில்லை. புலிகள் காலத்தில் ஆட்லறி தாக்குதலைக் காரணம் காட்டி பாதுகாப்பு வலயங்கள் ஒதுக்கப்பட்டன. தற்போது புலிகளும் இல்லை ஆட்லறியும் இல்லை. அப்படியானால் காணி ஏன் பிடிக்கப்பட்டுள்ளது? தொடர்ந்தும் காணிகள் கையகப்படுத்தப்படுவதன் நோக்கம்தான் என்ன?

இது அரசின் மோசமான கொள்கையையே வெளிப்படுத்துகின்றது. அதேவேளை, வடக்கு, கிழக்கில் பெருபான்மை இனக் குடியேற்றங்கள் இடம்பெறுகின்றன. குடிப்பரம்பலை மாற்றியமைக்கவே இவ்வாறு செய்யப்படுகின்றது.

கலாசாரம், மொழி மாற்றியமைக்கப்படுவதன் நோக்கம் என்ன? இந்து சமய இடங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. இது தொடர்பில் அரசுக்குப் புரிந்தும் இன்னும் பதில் கிடைக்கவில்லை. கிண்ணியாவில் புத்தர்சிலை அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், இலங்கை – இந்திய ஒப்பந்தம் மீறப்படுகின்றது. எமக்கு ஒதுக்கப்படும் நிதியும் குறைவாகவே உள்ளது” – என்று தெரிவித்தார் சம்பந்தன் எம்.பி.