2009ஆம் ஆண்டில் இராணுவ ரீதியாக தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட போதிலும், அவர்களின் சர்வதேச வலையமைப்பு மற்றும் நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்ந்தும் இயங்கி வருவதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.
உலக நாடுகளின் பயங்கரவாதம் குறித்த 2014ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. போர் முடிவடைந்த பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கையில் எவ்வித தாக்குதல்களையும் மேற்கொள்ளவில்லை என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
எனினும், அமெரிக்கா மற்றும் மலேசியா ஆகிய தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட குற்றச்சாட்டில் 13 தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதையும் அறிக்கை குறித்து காட்டியுள்ளது.
கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் மூலம் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி, இலங்கை ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச உள்ளிட்ட பல முக்கிய அரசியல் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டனர் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, 2014ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்து வருவதாகத் தெரிவித்து 16 புலம்பெயர் நிறுவனங்கள் மற்றும் 422 தனிப்பட்ட நபர்களுக்கு இலங்கை அரசாங்கம் தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.