புகைத்தல் பொருட்களின் விற்பனையை கைவிட்டுவரும் வர்த்தகர்கள்

தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரி பிரிவிலுள்ள உணவகங்கள் உள்ளிட்ட வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் புகைத்தல் பொருட்கள் விற்பனை செய்வதைத் தவிர்த்து வருவதை காணக்கூடியதாகவுள்ளதென தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரி எஸ்.நந்தகுமார் இன்று தெரிவித்தார்.

கடந்த காலங்களில் தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரி பிரிவிலுள்ள வர்த்தக நிலையங்கள், உணவகங்களின் உரிமையாளர்களுக்கு விழிப்பணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அத்துடன், சுகாதார வைத்தியதிகாரி பணிமனை, சைவ மகாசபை, சுகாதார அமைப்புக்கள், பொது அமைப்புக்கள், மற்றும் பொது மக்கள் உள்ளிட்டவர்கள் இணைந்து புகைத்தலுக்கு எதிரான பேரணியையும் நடத்தியிருந்தனர்.

இத்தகைய நடவடிக்கைகள் காரணமாக தற்போது தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரி பிரிவிலுள்ள பல வர்த்தக நிலையங்கள் புகைத்தல் பொருட்களை விற்பனை செய்வதை தவிர்த்துள்ளதாகத் தெரிவித்தார்.

ஏனைய வர்த்தகர்களும் புகைத்தல் பொருட்கள் விற்பனை செய்வதை தவிர்க்க முன்வர வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.