பரிசோதனைகளுக்காக, 15 கிணறுகளில் நீர் எடுக்கப்பட்டுள்ளன

water1சுன்னாகம் மின்சார நிலையத்தை அண்டிய பகுதிகளிலுள்ள கிணறுகளில், 15 கிணறுகளின் நீரை பரிசோதனை செய்வதற்காக கடந்த வெள்ளிக்கிழமை (01) எடுத்துள்ளதாக, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு அதிகார சபையின் யாழ். மாவட்ட அலுவலக அதிகாரியொருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (03) தெரிவித்தார்.

சுன்னாகம் மின்சார நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால், அதனைச் சூழவுள்ள கிணறுகளின் நீர் மாசடைந்த நிலையில் காணப்படுகின்றது.

இதனால், அந்நீரை மக்கள் பாவனை செய்ய முடியாத நிலையில் இருக்கின்றது. இது தொடர்பில் அப்பகுதி மக்கள் வலி. தெற்குப் பிரதேச சபை, உடுவில் சுகாதார வைத்தியதிகாரி பணிமனை ஆகியவற்றுக்குத் தெரியப்படுத்தினர்.

இந்நிலையில், வலி. தெற்குப் பிரதேச சபை, சுகாதார வைத்தியதிகாரி ஆகியோர், அப்பிரதேசத்திலுள்ள கிணறுகளின் நீரின் தன்மையை உறுதிப்படுத்தித்தரும்படி தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு அதிகார சபையின் யாழ். மாவட்ட அலுவலகத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

அதற்கமைய மேற்படி கிணறுகளின் நீர் பரிசோதனைகளுக்காக எடுத்துச் செல்லப்பட்டதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

சுன்னாகம் மின்சார நிலையத்தை அண்டிய பகுதிகளில் வசிக்கும் மக்களின் குடிநீர்த் தேவைக்காக வலி. தெற்குப் பிரதேச சபையால், நாளாந்தம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor