நெடுந்தீவு குதிரைகள் இராணுவத்தினரால் கடத்தல்?

வலி.வடக்கில் கடந்த 26 வருட காலமாக உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து அண்மையில் மீள் குடியேற அனுமதிக்கப்பட்ட காங்கேசன்துறை பகுதிகளில் நான்கு குதிரைகள் கட்டாகாலிகளாக அலைந்து திரிகின்றன.

இந்த குதிரைகளை இராணுவத்தினரே வளர்ப்பதாக தெரிய வருகின்றது. குறித்த நான்கு குதிரைகளில் ஒரு குதிரை நெடுந்தீவில் வாழும் நபர் ஒருவரின் வளர்ப்பு குதிரை என கண்டறியப்பட்டு உள்ளது. குறித்த குதிரையில் காணப்படும் சூல குறியீடு மூலமே குதிரை அடையாளம் காணப்பட்டு உள்ளது.

இந்த குதிரைகள் எவ்வாறு வலி.வடக்கு பகுதிகளுக்கு கொண்டு வரப்பட்டது என்பது தெரியவரவில்லை. இராணுவத்தினரால் கடத்தி வரப்பட்டு இருக்கலாம் எனவும் , அதற்கு உடந்தையாக கடற்படையினர் செயற்பட்டு இருக்கலாம் எனவும் நம்படுகின்றது.

யாழ்.மாவட்டத்தில் நெடுந்தீவு பிரதேசத்திலையே குதிரைகளும் கோவேறு கழுதைகளும் உள்ளன இவை 1660 ம் ஆண்டு முதல் 1675ம ஆண்டு வரை வடபகுதியின் ஒல்லாந்து அரசாங்கத்தின் ஆளுனராக இருந்த ரிஜிக் லொஸ்வேன் கொஹென்ஸ் இந்தத் தீவில் தங்கியிருந்த போது இந்த மிருகங்களை கப்பல்கள் மூலம் இத்தீவுக்கு கொண்டு வந்து இறக்கியிருந்தார்.

19 ஆம் நூற்றாண்டில் இவை நோலான் என்ற பிரித்தானியரால் முறையாக வளர்க்கப்பட்டன. அன்றில் இருந்து இத்தீவிலிருந்து இக்குதிரைகளை வெளியே கொண்டு செல்ல முடியாது என்ற ஒரு சட்டம் நெடுந்தீவில் வழக்கில் உள்ளது.

தற்போது அக் குதிரைகள் மரபுரிமை சொத்தாக அறிவிக்கப்பட்டு , குதிரைகள் நெடுந்தீவை விட்டு கடத்தப்படுவது தண்டனைக்கு உரிய குற்றமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையிலையே இந்த குதிரைகள் கடத்தி வரப்பட்டு வலி.வடக்கு பிரதேசத்தில் வளர்க்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: Editor