நாவலப்பிட்டி இளைஞனுக்கு நேர்ந்த அவலம்!

நாவலப்பிட்டி நகரிலுள்ள தனியார் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள வருகைத் தந்த இளைஞர் ஒருவர், எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர், அவரது மகன் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலைய பணியாளர்களால் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று, நேற்று (22) இரவு இடம்பெற்றுள்ளது.

இத்தாக்குதலில் காயமடைந்த இளைஞன், தனது ஓட்டோவுக்கு பெட்ரோல் நிரப்புவதற்காக நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த போது, குறித்த எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளரின் நண்பர் ஒருவர் வரிசையில் நிற்காமல் எரிபொருளை பெற முயற்சித்துள்ளார்.

இதன்போது இந்த விடயம் தொடர்பில் குறித்த இளைஞன், எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையிலேயே குறித்த இளைஞன் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதுடன், எரிபொருள் நிரப்பு நிலைய பணியாளர்களால் அடித்து இழுத்துச் செல்லப்பட்டு நாவலப்பிட்டி ரயில் நிலையத்துக்கு அருகில் வீசப்பட்டுள்ளான்.

இதனையடுத்து, 1990 அம்பியூலன்ஸ் ஊடாக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட இளைஞன், மேலதிக சிசிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர், குறித்த இளைஞனுக்கு எதிராக நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில், இச்சம்பவம் இடம்பெற்ற போது, பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருந்ததாக வரிசையில் நின்ற நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.