நாம் ஒட்டுண்ணிகளாக மாறியிருப்பதே மூல காரணம்! – பொ.ஐங்கரநேசன்

பூமித்தாயுடன் கொடுத்து வாங்கும் உறவைப் பேணி வாழ்ந்த நாம், இன்று பூமித்தாய்க்கு எதனையுமே வழங்காமல் அவளுடலில் இருந்து எல்லாவற்றையுமே உறிஞ்சும் ஒட்டுண்ணிகளாக மாறியிருக்கிறோம், இதுவே இன்றைய சூழல் அனர்த்தங்களுக்கெல்லாம் மூல காரணம் என்று வடக்கு மாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

1

 

கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பாடசாலைகளிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட நூறு மாணவர்களுக்குக் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் ´ஆரோக்கிய வாழ்வு´ என்னும் கருப்பொருளில் மூன்று நாள் வதிவிடக் கருத்தரங்கு நடைபெற்றது.

2

இதில் இறுதி நாளான நேற்று புதன்கிழமை (17.09.2014) கலந்து கொண்டு ´சுற்றுச்சூழலும் ஆரோக்கியமும்´ என்ற தலைப்பில் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் உரையாற்றியபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

பூமியை நாம் பூமித்தாய் என்றும் அன்னை பூமி என்றும் அழைப்பது பூமியில் நாம் பிறந்து வாழ்வதால் மாத்திரம் அல்ல. பூமியே தன்னளவில் உயிருள்ள ஒரு பேரன்னைதான்.

நாம் உயிரோடு இருப்பதால் எமது உடலின் வெப்பநிலையை மாறாது பேணுகிறோம். இரத்தத்தில் உள்ள குளுக்கோசின் செறிவைச் சீராகப் பேணுகிறோம்.

5

இந்த ஒரு சீர்த்திட நிலை பூமிக்கும் இருக்கிறது. எங்களைப் போன்றே பூமியும் தன்மேற்பரப்பின் வெப்பநிலையை, ஒட்சிசனின் சதவீதத்தை, கடல்நீரில் உப்பின் செறிவையெல்லாம் மாறாமல் பேணி வருகிறது.

இதனால் பூமியை உயிருள்ள ஒரு பேரன்னையாகக் கருதும் போக்கு சூழலியல் தத்துவவியலாளர்களிடையே உருவாகியுள்ளது. எமது உடலின் உள்ளே எண்ணில் அடங்காத அளவுக்கு நுண்ணங்கிகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

6

அதே போன்றுதான் பூமி என்னும் பேரன்னையின் உடலினுள்ளும் நாங்கள் உட்படக் கோடானுகோடி உயிரினங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

எமது உணவுக்குழாயில் வாழுகின்ற இ. கோலி பக்ரீறியாக்கள் எமக்குத் தேவையான விற்றமின்களைத் தொகுத்துத்தர, நாம் அதற்கு உணவையும் வாழ்வதற்கு இடத்தையும் வழங்கிவருகிறோம். ஒன்றுக்கொன்று கொடுத்து வாழும் ஒன்றியவாழி முறையில் நீடிப்பதாலேயே எமது உடல் ஒருபோதும் இந்த பக்ரீறியங்களை அழிப்பதற்கு நினைப்பதில்லை.

ஆனால், நோய்க்கிருமிகள் உடலினுள் நுழைந்து பல்கிப்பெருகி நச்சுகளைச் சுரந்து எமது உடற்கலங்களைச் சிதைக்க ஆரம்பிக்கும்போது, எமது உடல் நோய்க்கிருமிகளை அழிக்கும் முயற்சியில் இறங்குகின்றது.

7

அதேபோன்றுதான், பூமித்தாய்க்குக் கொடுத்து வாங்கி ஒன்றிய வாழ்க்கை வாழ்ந்து வந்த நாம் இப்போது ஏழு பில்லியன்களுக்கும் மேலாகப் பெருகிப் பூமியின் வளங்களையெல்லாம் கண்மூடித்தனமாக அழிக்க ஆரம்பித்துவிட்டோம்.

பூமித்தாயின் மடியை நஞ்சுகளால் நிரப்பி வருகிறோம். இதனால்தான் பூமி அன்னை எமது எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில் எங்களை இயற்கை அனர்த்தங்களால் அழிக்க ஆரம்பித்திருக்கிறாள், கடற்கோள், மழைவெள்ளம், கடும்வரட்சி, இவற்றால் ஏற்படும் கொள்ளை நோய்கள் எல்லாம் எங்களைக் கட்டுக்குள் கொண்டுவருகின்ற இயற்கையின் பேரிடர்கள்தான்.

 

10

எனவே பூமியுடன் கொடுத்து வாங்கும் பழைய உறவுமுறைக்கு நாங்கள் திரும்பப் போகிறோமா அல்லது ஒட்டுண்ணிகளாகத்தான் வாழப்போகிறோமா என்பது தொடர்பாக மாணவர்களாகிய நீங்கள் முடிவெடுக்கவேண்டும் இந்த முடிவில்தான் மனுக்குலத்தின் எதிர்காலம் இந்தப் பூமியில் தங்கியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.