நாட்டில் இனவாதத்தை தூண்டுகிறது பொலிஸ், வெட்கமே இல்லாதவர் அதன் பேச்சாளர் சாடுகின்றது த.தே.கூட்டமைப்பு

இனவாதத்தைப் பொலிஸாரே தூண்டி வருகின்றனர் என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் பொலிஸ் பேச்சாளர், பல்கலைக்கழக மாணவன் தன்னைத் தானே தாக்கிக் கொண்டார் என்று அறிக்கை கொடுத்ததையும் சாடியுள்ளது.

suresh

‘சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவரான சந்திரகுமார் சுதர்சன் பல்கலைக்கழக வளாகத்தினுள் தாக்குதலுக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவேளையில், பயங்கரவாதக் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அவரைக் கைது செய்தனர்.

அத்துடன் அவரை ஒரு பயங்கர வாதியாகச் சித்திரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது கவலையளிப்பதுடன் கண்டனத்துக்குரியது’ என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிறேமச் சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர் ஒருவர் தாக்கப்பட்டதும் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதும் அனைவரும் அறிந்த விடயங்கள். இது தொடர்பாகப் பொலிஸ் பேச்சாளர், அந்த மாணவன் தன்னைத் தானே பின்னங்கைகளைக் கட்டிக் கொண்டு தாக்கிக்கொண்டார் என்றும் தனக்குத்தானே பிளேட்டால் கீறிக்கொண்டார் என்றும் பத்திரிகைகளுக்குத் தெரிவித்துள்ளார். இவ்வாறு ஒரு அறிக்கை தயார்படுத்தப் படுவதைக் கடந்த வெள்ளிக் கிழமை நடாளுமன்ற ஒத்தி வைப்புப் பிரேரணையின் போது நான் எதிர்வு கூறியிருந்தேன்.

அவ்வாறே நடந் தேறியும் உள்ளது.மாணவன் காயமுற்றிருந்த செய்தி கேட்டு சிரேஸ்ட மாணவரான வவுனியாவைச் சேர்ந்த மாணவன் யோகநாதன் நிரோஜன் எனபவர் அவரைப் பார்க்கச் சென்றதற்காகக் கைது செய்யப்பட்டு கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தினால் சரீரப் பிணையில் செல்ல அனுமதிக்கப் பட்டுள்ளார்.

சக மாணவரைச் சந்திப்பது குற்றமா? அது ஒரு மனிதாபிமானச் செயற்பாடாகப் பொலிஸாருக்குத் தெரியவில்லையா? அவ்வாறு சந்தித்தவரையும் கைது செய்தது ஏன்?

பொலிஸாரின் செயற்பாடுகள் அனைத்தும் அரசியல் மயப்படுத்தப்பட்டதாகவே இருக்கின்றன. இலங்கை அரசுக்குச் சாதக மாக இயங்கக்கூடிய பெளத்த பிக்குகள் எவ்வளவு தீவிரவாதப் போக்கைக் கொண்டிருந்தாலும் அவர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள்.

அவர்களுக்கு ஆதரவாகப் பொலிஸாரும், இராணுவத்தினரும் செயற்பட்டு வருகின்றனர். ஆனால் அரசுக்கு எதிராகச் செயற்பட்டால், புத்த பிக்குவைக் கூட தமக்குத் தாமே சுன்னத் செய்து கொண்டதாகவும், தம்மைத் தாமே தாக்கிக் கொண்டதாகவும் ஒப்புதல் வாக்கு மூலம் அளித்ததாகக் கூறுகின்றார்கள்.

இதேபோலத்தான் சமுர்த்தி உத்தியோகத்தர் தம்மைத் தாமே மரத்தில் கட்டிவைத்துக் கொண்ட சம்பவமும் இந்த நாட்டில்தான் அரங்கேறியது. இவற்றை எவ்விதமான வெட்கமும் இல்லாமல் பொலிஸ் பேச்சாளர் வெளியிடுவது, பொலிஸார் மீதுள்ள கொஞ்ச நஞ்ச மதிப்பையும் கேள்விக்குள்ளாக்குகின்றது.

சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டியவர்கள் தாக்குதலுக்குள்ளானவர்களையே கைது செய்வதும் அவர்களை அச்சுறுத்தி ஒப்புதல் வாக்குமூலம் வாங்குவதும் வேடிக்கையானதும் கேலிக்குரிய செயற்பாடுகளாகவும் இருக்கின்றன. இத்தகைய ஆச்சரியமான விடயங்களை இலங்கையில் மட்டுமே நாம் காணமுடிகின்றது.

அரசினதும் அரச இயந்திரங்களினதும் இத்தகைய நடவடிக்கைகள் நாட்டில் எத்தகைய நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதுடன் அரசே இனவாதத்தைத் தூண்டுகின்றது என்ற முடிவிற்கும் இந்த நாட்டு மக்கள் வருவதற்கு வழிவகுத்துவிடும் என்பதையும் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றேன் என்றுள்ளது.

Recommended For You

About the Author: Editor