நாடுகடத்தப்பட்ட முன்னாள் போராளிக்கு 30 ஆயிரம் யூரோ இழப்பீடு

முன்னாள் விடுதலைப் புலிப் போராளியொருவரின் புகலிடக் கோரிக்கையை நிராகரித்து அவரைச் ஸ்ரீலங்காவிற்கு திருப்பியனுப்பியமைக்காக மனித உரிமைக்கான ஐரோப்பிய நீதிமன்றம் அவருக்கு 30,000 யூரோக்களை இழப்பீடாக செலுத்தும்படி சுவிட்சர்லாந்து அரசிற்கு உத்தரவிட்டிருக்கின்றது.

பெயர் குறிப்பிடப்படாத இந்த முன்னாள் போராளியையும், அவரது குடும்பத்தினதும் புகலிடக்கோரிக்கையினை நிராகரித்திருந்த சுவிட்சர்லாந்து அரசாங்கம் அவர்களை 2013 ஆம் ஆண்டு ஸ்ரீலங்காவிற்கு திருப்பியனுப்பிருந்தது.

முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினராக அங்கம் வகித்துள்ள குறித்த நபர் அரச படைகளுக்கெதிரான சண்டைகளில் பங்கேற்றிருப்பதோடு, 2003 ஆம் ஆண்டு கொழும்பில் வைத்துக் கைதுசெய்யப்பட்டு சுமார் மூன்று மாதங்களாகத் தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதைக்கும் உள்ளாகியிருக்கிறார்.

இத்தாலியூடாகச் சென்று 2009 ஆம் ஆண்டு மே மாதம் சுவிட்ஸர்லாந்தில் தனது மனைவியுடன் புகலிடம் கோரிய இவரது புகலிடக்கோரிக்கை 2011 ஆம் ஆண்டு நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் இவர் மேற்கொண்ட மேன்முறையீடுகளும் சுவிட்சர்லாந்து நீதிமன்றங்களினால் நிராகரிக்கப்பட்டுள்ளன.

தான் திருப்பி அனுப்பப்பட்டால் கைதுசெய்யப்பட்டுச் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவேன் என்று அவர் தெரிவித்திருந்த போதிலும், அவரது கோரிக்கைகள் நம்பகத்தன்மையின் அடிப்படையில் நிராகரிக்கப்பட்டு, அவரும், அவரது மனைவியும், சுவிட்சர்லாந்தில் பிறந்த இரண்டு குழந்தைகளும் 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுவிஸ் அரசினால் ஸ்ரீலங்காவிற்கு நாடு கடத்தப்பட்டிருந்தனர்.

திருப்பி அனுப்பப்பட்ட குறித்த முன்னாள் போராளியும், அவரது குடும்பமும் கொழும்பு கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்துக் கைதுசெய்யப்பட்டு கடும் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

சுமார் 13 மணித்தியால விசாரணையின் பின்னர் மனைவியும், பிள்ளைகளும் விடுவிக்கப்பட்ட போதிலும், முன்னாள் போராளி பூசா தடுப்பு முகாமில் பலமாதங்கள் தடுத்துவைக்கப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்.

அதன்பின்னர் புனர்வாழ்வு என்ற பெயரில் அடையாளங்காணப்படாத இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறார்.

2013 ஆண்டும் ஏப்ரல் 6 ஆம் திகதி குறித்த போராளி தடுத்துவைக்கப்பட்டிருந்த இடத்திற்கு விஜயம் செய்துள்ள சுவிட்ஸர்லாந்து தூதரக அதிகாரியிடமும், ஐ.நா மனித உரிமை அதிகாரியொருவரிடமும் அவர் அங்குள்ள நிலைமைகளைக் கூறமுடியாத ஒரு இக்கட்டான சூழலில் இருந்ததாக அந்த அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த விஜயத்தின் பின்னர் அவரது மனைவியும், பிள்ளைகளும் மீண்டும் சுவிட்சர்லாந்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் விடுவிக்கப்பட்டுள்ள இவர் மீண்டும் மனிதாபிமான அடிப்படையில் சுவிற்சர்லாந்திற்குச் செல்வதற்கு விண்ணப்பித்து மீண்டும் அங்கு சென்ற அவர் மீண்டும் புகலிடக்கோரிக்கைக்கு விண்ணப்பித்தபோது அந்த விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

இதேநிலைமை பெயர் குறிப்பிடப்படாத மற்றுமொரு நபருக்கும் ஏற்பட்டிருக்கிறது. இந்த வழக்குக் குறித்து நேற்றையதினம் மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் வழங்கியுள்ள மிக முக்கியமான தீர்ப்பொன்றில், குறித்த நபர் ஸ்ரீலங்காவிற்குத் திருப்பி அனுப்பப்பட்டால் சித்திரவதைக்குள்ளாவார் என்று கூறியிருந்தமைக்கு மத்தியிலும், திருப்பி அனுப்பப்பட்டு அங்கு சித்திரவதைக்குள்ளாகியிருக்கிறார் என்றும் இந்த அபாயங்கள் சுவிற்சர்லாந்து அறிந்துவைத்திருக்கவேண்டியது அவசியம் என்றும் தெரிவித்திருக்கிறது.

இந்த வகையில் சித்திரவதை இடம்பெறும் நாடொன்றிற்கு அபாயங்களுக்கு மத்தியில் புகலிடக்கோரிக்கையாளரொருவரைத் திருப்பி அனுப்பியிருப்பதனூடாக சுவிற்சர்லாந்து மனித உரிமைக்கான ஐரோப்பிய ஒன்றிய உடன்படிக்கையினை மீறியிருக்கிறது என்று தீர்ப்பளித்திருக்கிறது.

இவருக்கு ஏற்பட்ட இழப்பிற்காக சுவிற்சர்லாந்து அரசு இவருக்கு 30,000 யூரோக்கள் இழப்பீடாகவும், 4770 யூரோக்கள் செலவுத் தொகையாகவும் வழங்கவேண்டும் என்று தீர்ப்பளித்திருக்கிறது.

2015 ஆம் ஆண்டு புதிய மைத்திரி-ரணில் அரசு பதவியேற்றதன் பின்னர் மனித உரிமைகள் நிலைமைகளின் அங்கு பாரிய முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்ற போதிலும், அங்கு இன்னமும் வெள்ளைவான் கடத்தல்களும், பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட சித்திரவதைகளும் இடம்பெற்றுவருவதாக பல்வேறு சர்வதேச தொண்டு நிறுவனங்கள் ஆதாரங்களுடன் கூறிவரும் நிலையிலேயே இந்தத் தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.

நேற்றைதினம் வெளியான ஐக்கியநாடுகளின் சித்திரவதைகளுக்கு எதிரான விசேட பிரதிநிதி ஹுவான் மெண்டெஸ் வெளியிட்டிருந்த அறிக்கையிலும் இவ்வாறான சம்பவங்கள் ஸ்ரீலங்காவில் தொடர்வதை உறுதிசெய்திருக்கிறார்.