நல்லூர் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் நிறைவேறியது!!

நல்லூர் பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 13 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தவிசாளர் ப.மயூரனால் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்கு, 20 உறுப்பினர்களில் 13 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான இலங்கை தமிழரசுக் கட்சியியைச் சேர்ந்த மூன்று ஊறுப்பினர்கள் நடுநிலை வகித்ததுடன், ரெலோவைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

அதேபோன்று, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மூன்று உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களிக்க, இரண்டு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர்.

அத்தோடு, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழர் விடுதலை கூட்டணி மற்றும் சுயேச்சை குழு உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இதன்மூலம், சபையின் வரவு செலவுத் திட்டம் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையில் இருந்த நல்லூர் பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் முன்னாள் தவிசாளர் த.தியாகமூர்த்தியினால் இரண்டு தடவைகள் சமர்ப்பிக்கப்பட்டு தோல்வியடைந்த நிலையில் தவிசாளர் தனது பதவியை இழந்திருந்தார்.

இதனால், சபையின் புதிய தவிசாளரைத் தெரிவுசெய்யும் கூட்டம் கடந்த டிசம்பர் 30ஆம் திகதி இடம்பெற்றபோது புதிய தவிசாளராக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ப.மயூரன் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor