நல்லிணக்கத்துக்கு சாத்தியமே இல்லை, அரசின் செயற்பாடுகள் அதனை வெளிப்படுத்துகின்றன – சம்பந்தன்

sambanthan 1_CI“இலங்கை ஆட்சியாளர்களின் அடாவடிச் செயற்பாடுகளால் நாட்டில் நல்லிணக்கம் ஏற்பட வாய்ப்பேயில்லை” என்று இலங்கை வந்துள்ள அமெரிக்க உயர் குழுவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் நேற்று எடுத்துரைத்தார்.

இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக அமெரிக்காவின் வெளிவிவகாரங்களைக் கையாளும், அமெரிக்க காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டேமியன் நேர்பி தலைமையிலான மூன்று சிரேஷ்ட நிலை அதிகாரிகள் இலங்கைக்கு நேற்று முன்தினம் வியாழக்கிழமை வருகை தந்தனர்.

இலங்கை அரசுக்கு எதிராக அடுத்த ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடரில் மற்றுமொரு பிரேரணையைக் கொண்டு வருவதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளுக்காக இங்கு வந்துள்ள இவர்கள் நேற்றுத் திருகோணமலை மாவட்டத்துக்கு பயணம் மேற்கொண்டனர்.

திருகோணமலைக்கு சென்ற இந்தக் குழுவினருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையே சம்பந்தனின் இல்லத்தில் நேற்று மாலை முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பின் போது, அரசு இவ்வாறு தொடர்ந்து பயணிக்கு மானால் நல்லிணக்கம் ஏற்படு வதற்கு வாய்ப்பு இல்லை என்ற விடயத்தை அமெரிக்கக் குழுவிடம் சுட்டிக்காட்டினார் சம்பந்தன்.

இந்தச் சந்திப்புக் குறித்து அவர் தெரிவித்தவை வருமாறு:

வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் பூர்விக நிலங்கள் அபகரிக்கப்பட்டு வருகின்றன. சிங்களக் குடியேற்றங்களை முன்னெடுப்பதற்கும், இராணுவ முகாம்கள் அமைப்பதற்குமே இந்தக் காணி அபகரிப்பு நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.

போர் முடிவுற்று நான்கு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் வடக்கிலிருந்து இராணுவத்தினர் தொகை குறைக்கப்படவில்லை. இதனால் சிவில் விடயங்களிலும் இராணுவத்தினர் தலையீடு செய்கின்றனர்.

மக்கள் தமது அன்றாட வாழ்க்கையைக் கொண்டு நடத்த முடியாத அளவுக்கு இராணுவத் தலையீடு உள்ளது. இவற்றை அமெரிக்கக் குழுவுக்குச் சுட்டிக்காட்டினோம்.

வலி.வடக்கில் மக்களின் காணிகளை அபகரித்தது மட்டுமல்லாமல், அங்குள்ள தமிழ் மக்களின் வீடுகளை அழித்தொழிக்கும் நடவடிக்கைகளையும் இராணுவத்தினர் முன்னெடுக்கின்றனர். இதனைத் தடுப்பதற்கு ஜனாதிபதியுடன் பேசியும் பயனில்லை.

தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்கள் இதுவரையில் அரசால் வெளிப்படுத்தப்படவில்லை. அவர்களை விடுவிப்பதற்கு ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

இறுதிப் போரில் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டுக் காணமற் போனவர்கள் தொடர்பிலும் எந்தவித முன்னேற்றகரமான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை என்ற விடயத்தையும் அவர்களுடனான பேச்சில் விளக்கினேன்.

அத்துடன் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. நல்லிணக்கத்துக்கான முனைப்புக்கள் எதனையும் அரசு இதுவரை வெளிப்படுத்தவில்லை. அரசு இதே போக்கில் சென்று கொண்டிருக்குமானால் நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை.

கடந்த இரண்டு தடவைகள் இலங்கைக்கு எதிராக பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டன. ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசு முழுமையான நடவடிக்கைள் எதனையும் எடுக்கவில்லை.

மாறாகச் சர்வதேச சமூகத்தைத் திருப்திப்படுத்துவதற்காக ஒன்றிரண்டு விடயங்களை, எதிர்வரும் மார்ச் மாதத்துக்கு முன்னர் செய்து முடிக்க அவரசப்படுகிறது என்றும் இந்தச் சந்திப்பில் எடுத்துரைத்தேன்.

அரசியல் தீர்வு தொடர்பில் தமிழ் மக்களின் நிலைப்பாடு என்பதையும் அவர்களுக்கு தெளவாக எடுத்துரைத்தேன் – என்றார்.

இன்றைய தினம் அமெரிக்க குழுவினர் யாழ்ப்பாணத்துக்க வருகை தரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts